குளித்தலை, தரகம்பட்டி, லாலாபேட்டை பகுதி அரசு பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா

குளித்தலை, தரகம்பட்டி, லாலாபேட்டை பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
குளித்தலை, தரகம்பட்டி, லாலாபேட்டை பகுதி அரசு பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா
Published on

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீகம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு குளித்தலை வட்ட உதவி கல்வி அதிகாரி ராஜலெட்சுமி தலைமை தாங்கினார். இதில் இப்பள்ளியின் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், ஊர்பொதுமக்கள் ஆகியோர் சேர்ந்து இப்பள்ளிக்குத் தேவையான மேஜை, நாற்காலி, ஜெராக்ஸ் எந்திரம், பீரோ, ரேடியோ செட், குடம், பாய் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கினார்கள். இதில் இப்பள்ளி ஆசிரியை செல்வியாமோசஸ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செந்தில்குமார், மேலாண்மைக் குழு தலைவர் நிர்மலா மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாகபள்ளி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

தரகம்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், கிராம மக்கள் உள்பட பலர் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு தேவையான மேஜைகள், நாற்காலிகள், தலைவர்கள் படங்கள், மின்விசிறி, கடிகாரம், கணினியில் பயன்படுத்தக்கூடிய ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து வழங்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நேரு இளைஞர் நற்பணிமன்ற தலைவர் தேவராஜ் வரவேற்றார். முடிவில் பள்ளி தலைமைஆசிரியர் லெட்சுமி நன்றி கூறினார்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லாலா பேட்டை மகிளிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கல்வியாளர் மருதநாயகம், கிராம கல்விக்குழு தலைவர் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ஜரீனா பேகம் வரவேற்று பேசினார். இதில் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளி நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com