பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க முதல்-மந்திரி குமாரசாமி முயற்சி: எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க முதல்-மந்திரி குமாரசாமி முயற்சி செய்வதாக எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க முதல்-மந்திரி குமாரசாமி முயற்சி: எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் மூலம் முயற்சி செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டுகிறார். ஆனால் அவரே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்கிறார்.

இந்த கூட்டணி ஆட்சி பாதுகாப்பாக இருக்கிறது என்றால், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்குவதாக ஆசை வார்த்தைகளை கூறுவது ஏன்?. இந்த அரசு அதிக நாட்கள் ஆட்சியில் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

குமாரசாமி கலபுரகிக்கு சென்றபோது, நமது கட்சியை சேர்ந்த சுபாஷ் குத்தேதாரை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வரும்படி அழைத்துள்ளார். அப்போது அவருக்கு மந்திரி பதவியை வழங்குவதாக உறுதியளித்தார். இந்த அரசு கவிழ்ந்துவிட்டது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையா?.

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இந்த அரசு கவிழ்ந்துவிட்டால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இந்த கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு மூச்சுத்திணறும் நிலை உள்ளது. இந்த கூட்டணி ஆட்சி அமைந்து 4 மாதங்கள் ஆகின்றன. வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மக்கள் நலனை இந்த அரசு மறந்துவிட்டது. துக்ளக் தர்பார் நடக்கிறது.

விதான சவுதாவில் மந்திரிகள் இருப்பது இல்லை. நீர்ப்பாசனம், பொதுப்பணித்துறையில் கமிஷன் இல்லாமல் எந்த பணிகளும் நடைபெறுவது இல்லை. முன்னாள் பிரதமர் தேவேகவுடா குடும்பத்தினரின் ஊழல் மிதமிஞ்சி போய்விட்டது. அரசின் கருவூலத்தை கொள்ளையடித்து வருகிறார்கள்.

மந்திரி எச்.டி.ரேவண்ணா மீது நில முறைகேடு புகாரை காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு கூறி இருக்கிறார். இதுகுறித்து தேவேகவுடாவோ அல்லது குமாரசாமியோ வாய் திறக்கவில்லை. இந்த நில முறைகேடு குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பா.ஜனதா போராட்டம் நடத்தும்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கு நமது கட்சி நிர்வாகிகள் தயாராக வேண்டும். கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். கர்நாடகத்தில் வறட்சி உள்ளது. இதில் அரசு கவனம் செலுத்தவில்லை. விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நடந்து வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்க சிறப்பு நிதி உதவியை வழங்குமாறு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் நேரில் வலியுறுத்தினேன். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ரமேஷ் ஜிகஜினகி, எம்.பி.க்கள் ஷோபா, நளின்குமார் கட்டீல், ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.,, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com