குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை

புனித வெள்ளியையொட்டி குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடந்தது
குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை
Published on

நாகர்கோவில்,

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளி என்றும், துக்க வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இது தவக்காலத்தின் இறுதி நிகழ்வாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புனித வெள்ளி தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடந்தது. கத்தோலிக்க தேவாலயங்களில் வார்த்தை வழிபாடு நிகழ்ச்சி காலையிலேயே தொடங்கியது. அப்போது அருட்பணியாளர்கள் இயேசுவின் சிலுவைப்பாட்டு வசனங்களை சொல்லி மன்றாட்டு நடத்தினர். அதைத் தொடர்ந்து திருச்சிலுவை வழிபாடு நடந்தது. இந்த வழிபாட்டின் முடிவில் பக்தர்கள் திருச்சிலுவையை முத்தமிட்டு காணிக்கை வழங்கினார்கள்.

மேலும், புனித வெள்ளியையொட்டி சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்றபோது நடந்த நிகழ்வுகளை சித்தரித்து சிலுவைப்பாதை ஊர்வலத்தை நடத்துவது வழக்கம். ஊர்வலத்தில் இயேசு கிறிஸ்து போல் வேடமணிந்த ஒருவர் சிலுவையை சுமந்து செல்வார். காவலர் வேடமணிந்தவர்கள் அவரை துன்புறுத்துவார்கள்.

முன்னதாக இயேசுவை மரணத் தீர்ப்புக்கு உட்படுத்துவது முதல் காட்சியாக இடம் பெறும். அதன்பிறகு சிலுவையை சுமக்க வைத்தல், சிலுவை பாரம் தாங்காமல் முதல் முறை இயேசு கீழே விழுதல், இயேசுவை மரியாள் சந்தித்தல், இயேசுவுக்கு சீமோன் உதவி செய்தல், ரத்தக்கறை படிந்த இயேசுவின் முகத்தை ஒரு பெண்மணி துணியால் துடைத்தல், அந்த துணியில் இயேசுவின் முகம் பதிதல், இயேசு 2-வது முறையாக கீழே விழுதல், அவருக்கு பெண்கள் ஆறுதல் கூறுதல், இயேசு 3-வது முறையாக கீழே விழுதல், அவரது ஆடைகளை அகற்றுதல், சிலுவையில் அறைதல், உயிர் துறத்தல், உடலை மரியாள் தாங்குதல், உடல் அடக்க நிகழ்வு ஆகிய காட்சிகள் சிலுவைபாதையில் இடம்பெறும். இந்த நிகழ்ச்சி நேற்று பல ஆலயங்களில் தத்ரூபமாக சித்தரித்து காண்பிக்கப்பட்டது.

புனித வெள்ளியையொட்டி நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் இயேசுவின் திருப்பாடுகளை தியானிக்கும் நிகழ்ச்சியும், சிலுவைப்பாதையும் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றது. திருச்சிலுவையை ஆயர் நசரேன் சூசை முத்தமிட்டார். அதைத் தொடர்ந்து ஆலயத்தின் பல இடங்களில் திருச்சிலுவை வைக்கப்பட்டன. திருச்சிலுவையை ஏராளமானோர் முத்தமிட்டு காணிக்கை செலுத்தினர்.

இதை போல கொல்லங்கோடு அருகே பாலவிளை புனித சவேரியார் தேவாலயத்தில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ் தலைமையில் புனித வெள்ளி திருச்சடங்குகள் நடந்தன. பரக்குன்று இயேசு திருஇருதய ஆலயத்திலும் திருச்சிலுவை பாதை காட்சிகள் தத்ரூபமாக நடத்தி காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் அருட்பணியாளர் டோமி லிலில் ராஜா, பேரவை நிர்வாகிகள் ஏசுதாஸ், ஜோசப்ராஜ், செலின், மரியசிந்து மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். காட்சிப்படுத்தும் நிகழ்வை ரோஸ்ரோபின், அருள்சாம்லெட், அனிதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

குழித்துறை மறை மாவட்ட தலைமை பேராலயமான திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயத்தில் ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் புனித வெள்ளி திருச்சிலுவை வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்குத்தந்தை ஷெல்லி ரோஸ், ஆயர் செயலாளர் எட்வின்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்ட சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இயேசுவின் 7 செய்திகளை சொல்லி மும்மணி பிரார்த்தனை நடத்தினர். இந்த பிரார்த்தனையில் திரளானோர் கலந்து கொண்டனர். புனித வெள்ளியை தொடர்ந்து உயிர்ப்பு விழாவான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com