குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏப்ரல் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏப்ரல் மாதம் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏப்ரல் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
Published on

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள குன்றத்தூர் முருகன் கோவில் மற்றும் திருநாகேஸ்வரசாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். குன்றத்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெற்றுவரும் கும்பாபிஷேக பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.மேலும் இந்த கோவிலில் நடைபெற்றுவரும் திருமண மண்டப பணிகளையும், ஸ்ரீபெரும்புதூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடைகள் கட்டும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம கூறியதாவது:-

ஆன்மிகவாதிகளும், பக்தர்களும் பாராட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 9 மாதங்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக பணிகள் ரூ.2 கோடி செலவில் விரைவாக நடந்து வருகின்றன.

இங்குள்ள குறுகிய மலைப்பாதையை அகலப்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் பணிகள் நடைபெற்று வருகின்றன, அது மட்டுமல்லாமல் ரூ.3.20 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள திருமண மண்டப பணிகள் குறித்தும் தற்போது ஆய்வு மேற்கொண்டோம்.

வருகிற ஏப்ரல் மாதம் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வருகிற மே மாதம் சேக்கிழாருக்கு குருபூஜை அரசு விழாவாக நடைபெற உள்ளதால் இங்குள்ள சேக்கிழார் மணிமண்டபத்தை புனரமைக்கவும் ஆய்வு மேற்கொண்டோம்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள திருநாகேஸ்வரசாமி கோவில் பணிகள் ரூ. 1 கோடியே 20 லட்சம் செலவில் நடைபெற உள்ளது. இந்த கோவில் உள்ள நுழைவாயில் கதவு பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது என்பதால் அதனை மாற்றி தேக்கு மரத்திலான கதவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 9 மாதங்களில் 94 கோவில்களில் கும்பாபிஷேகம் அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் 80 தனியார் கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது, 1,500 கோவில்களில் பணிகள் தொடங்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளன. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் கட்டிடங்களில் குடியிருந்து வரும் வாடகைதாரர்களிடமிருந்து ரூ.500 கோடி வாடகை வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு. தற்போது ரூ.142 கோடி வரை வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது.

முறையாக தொடர்ந்து வாடகை செலுத்தாதவர்கள் மீது உரிய முறையில் சட்டப்படி வாடகை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இங்கு உண்மை நிலையை கண்டறிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட குழு உறுப்பினர் தேச மங்கையர்க்கரசி, இணை ஆணையர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com