கும்பகோணத்தில் ஏலச்சீட்டு நடத்தி விவசாயிகளிடம் ரூ.5 கோடி மோசடி

கும்பகோணத்தில் ஏலச்சீட்டு நடத்தி விவசாயிகளிடம் ரூ.5 கோடி மோசடி செய்து விட்டு தலைமறைவானவரை பிடிக்கக்கோரி அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் ஏலச்சீட்டு நடத்தி விவசாயிகளிடம் ரூ.5 கோடி மோசடி
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பவுண்டரீகபுரம் மேலத்தெருவை சேர்ந்த ஒருவர், ஏலச்சீட்டு கம்பெனி நடத்தி வந்தார். இந்த கம்பெனியில் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களாக சேர்ந்து தவணை முறையில் சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தனர்.

சீட்டு முடிவடைந்த நிலையில் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி செலுத்தாமல் சீட்டு நடத்தியவர் பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். சீட்டு கட்டியவர்கள் பணம் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பவுண்டரீகபுரம், மாங்குடி பகுதிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜீவபாரதி, துணைச் செயலாளர் அன்பு, மாவட்டக்குழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் சென்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் அருகே உள்ள ஒருவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏலச்சீட்டு கம்பெனி நடத்தி வருகிறார். அவர், பவுண்டரீகபுரம், மாங்குடி, கந்தன்தோட்டம், திருநாகேஸ்வரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏலச்சீட்டில் சேர்த்து அவர்களிடம் பணம் பெற்று வந்தார்.

அவர்களில் சிலருக்கு சீட்டு முடிந்துவிட்ட நிலையிலும் பணத்தை கொடுக்கவில்லை. பலர் பல தவணைகளில் சீட்டு கட்டி வருகின்றனர். ஒருவருக்கு கூட பணம் கொடுக்காத நிலையில், சிலரிடம் கடனை வாங்கிக்கொண்டு அந்த நபர் தலைமறைவாகி விட்டார். சுமார் ரூ.5 கோடி வரை மோசடி செய்து விட்டார். அவர் வீட்டில் உள்ளவர் களிடம் சென்று கேட்டால் சரியாக பதில் அளிப்பது இல்லை.

விவசாயம் செய்து கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்த தொகையை ஏலச்சீட்டில் கட்டி ஏமாந்து நிற்கிறோம். எனவே மோசடி செய்தவரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன், எங்களது பணத்தை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com