தாரமங்கலத்தில், 22-ந் தேதி கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.
தாரமங்கலத்தில், 22-ந் தேதி கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
Published on

தாரமங்கலம்,

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் உள்ளது. சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் பழமைவாய்ந்த இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு தற்போது கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணையன், கோவிந்தன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சின்னுசாமி, நகர செயலாளர் பாலசுப்ரமணியம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் செங்கோடன், நான்கு கோடிக்காரர்கள், மிராசுகள், கட்டளைதாரர்கள் மற்றும் பொதுமக்களை உறுப்பினர்களாக கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் கடந்த 4 மாதங்களாக பகல், இரவு பாராது பணியாற்றி வருகின்றனர். பக்தர்கள், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.2 கோடியில் இருந்து இந்த திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலின் முன்புறம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் 1,600 சதுர அடி பரப்பில் 38 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

150 அடி உயரத்தில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் வர்ணங்கள் தீட்டப்பட்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது. நந்தி மண்டபம் அருகில் ரூ.15 லட்சத்தில் 35 அடி உயரம் கொண்ட கொடி மரம் நடப்பட்டுள்ளது. இதற்காக மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட வேங்கைமரம் கேரள சிற்பக்கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு சுற்றிலும் செம்பு தகடுகள் போர்த்தப்பட்டு அனைவரின் கவனத்தையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.

கோவிலின் உள்ளே சகஸ்ரலிங்கம், அவினாசியப்பன், நந்தி மண்டபம், அம்மன், முருகன், நடராஜர், மூலவர் சன்னதிகளின் மேல் உள்ள கோபுரங்களும் வர்ணம் தீட்டப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.

இந்த கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் நடைபெறும். அப்போது ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறும். முன்னதாக காலை 7.30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராஜகோபுரம், விமானங்கள், சாமி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும் போது, ஹெலிகாப்டர் மூன்று முறை வலம் வந்து 200 கிலோ மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மாவட்ட கலெக்டர் ரோகிணி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், வி.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள், அறநிலையத்துறை செயலர் அபூர்வ வர்மா, ஆணையர் ஆர்.ஜெயா, செயல் அலுவலர் கலைச்செல்வி, தக்கார் மற்றும் செயல் அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

தாரமங்கலம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி குடிநீர் ஏற்றி குழாய் மூலம் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நாளன்று ஊரின் 5 இடங்களில் காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெற உள்ளது.

விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ரோகிணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கோவில் மற்றும் யாககுண்டம் உள்ள இடங்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, சங்ககிரி எம்.எல்.ஏ. ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கண்ணையன், கோவிந்தன், செயல் அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com