குண்டாறு, கிருதுமால் நதிகளில் இரவு, பகலாக மணல் கொள்ளை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் குண்டாற்று பகுதியில் அதிகாரிகள் துணையுடன் பட்டப்பகலில் மணல் திருட்டு நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
குண்டாறு, கிருதுமால் நதிகளில் இரவு, பகலாக மணல் கொள்ளை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
Published on

திருச்சுழி,

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு கிராமங்களை ஒட்டி குண்டாறு, கிருதுமால் நதி செல்கிறது. இந்த ஆற்றுப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சுழியில் இருந்து காரியாபட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம், ஆத்திக்குளம், பனிக்குறிப்பு, கிழவனேரி, கமுதி செல்லும் சாலையில் பனையூர், சேதுபுரம், இலுப்பையூர் ஆற்றுப்படுகை பகுதியில் திருட்டுத் தனமாக மணல் அள்ளப்படுவதால் மிகப்பெரிய பள்ளங்களாக உருவெடுத்து வருகின்றன.

தற்போது திருச்சுழி பகுதியில் முத்துராமலிங்கபுரம், இலுப்பையூர் பகுதியில் மணல் குவாரி உள்ளது. ஆனாலும் தற்போது பரட்டநத்தம், சாமிநத்தம், பனையூர் ஆகிய பகுதிகளில் உள்ள குண்டாறு மற்றும் பட்டா நிலங்களில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மணல் அள்ளி வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் துணை போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதிகாரிகளின் துணையுடன் எந்தவித அச்சமுமின்றி ஜேசிபி வாகனத்தை கொண்டு மணல் அள்ளி தனி குவாரியாகவே செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் கூறி வருகின்றனர். இது குறித்து புகார்கள் வரும்போது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் மாவட்ட நிர்வாகம் கூறினால் அவ்வாறு மணல் திருட்டு எதுவும் நடக்க வில்லை என்று அதிகாரிகள் கூறும் நிலை உள்ளது.

தொடர் மணல் திருட்டால் குண்டாறும், பட்டா நிலங்களும் பறிபோகும் நிலை ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், குண்டாற்று பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த பின்னர் அனுமதியின்றி மணல் அள்ளும் லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன. ஆனால் திருச்சுழியில் மட்டும் சுதந்திரமாக மணல் திருட்டு நடை பெறுவது வேதனையளிக்கிறது. திருச்சுழியில் மட்டும் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதா என தெரியவில்லை. இதே நிலை நீடித்தால் மணல் மாபியாக்கள் மீண்டும் குண்டாற்று பகுதிக்கு படையெடுப்பார்கள் என வேதனையுடன் கூறினர்.

இது குறித்து நேர்மையாக செயல்படும் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், நாங்கள் தினந்தோறும் அதிக விலைக்கு மணல் வாங்கி வாடிக்கையாளருக்கு ஒரு லோடு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை விற்பனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால் அனுமதியின்றி மணல் அள்ளும் நபர்கள் ரூ.11,000 முதல் 13,000 வரை நிர்ணயம் செய்கின்றனர். இதனால் நஷ்டம் ஏற்பட்டு லாரிகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் மணல் திருடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று கூறினர்.

எனவே மாவட்ட நிர்வாகம் திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் திருட்டுத் தனமாக மணல் அள்ளப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com