குரங்கணி தீ விபத்து: மதுரையில் சிகிச்சை பெறுபவர்களை எடப்பாடி பழனிசாமி பார்த்தார், உறவினர்களுக்கு ஆறுதல்

குரங்கணி தீ விபத்தில் படுகாயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்த்து, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
குரங்கணி தீ விபத்து: மதுரையில் சிகிச்சை பெறுபவர்களை எடப்பாடி பழனிசாமி பார்த்தார், உறவினர்களுக்கு ஆறுதல்
Published on

மதுரை,

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றத்துக்கு சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்றிரவு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை பார்த்தனர். பின்பு ஆஸ்பத்திரிக்கு வெளியே கண்ணீருடன் நின்ற உறவினர்களைப்பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் 39 பேர் மலையேற்றத்துக்காக குரங்கணி வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் 3 பேர் மலை ஏறமுடியாது என்று கூறி திரும்பிச் சென்றுவிட்டனர். 36 பேர் மட்டும் 2 குழுவாக பிரிந்து மலையில் ஏறி உள்ளனர்.

இவர்கள் திரும்பி வந்த போது காட்டுத்தீயில் சிக்கி விட்டனர். இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், 10 பேர் சிறியகாயத்துடன் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு சென்றுவிட்டனர். படுகாயம் அடைந்த 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வனத்துறை அனுமதியுடன் தான் மலை ஏற்றத்தில் ஈடுபடுவார்கள். பொதுவாக கோடை காலங்களில் வனப்பகுதியில் மலையேற்றத்துக்கு அனுமதி இல்லை. அந்த காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வனவிலங்குள் வெளியே வர வாய்ப்பு உள்ளது. மேலும் செடி,கொடிகள் காய்ந்து கிடக்கும் என்பதால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே கோடை காலத்தில் மலையேற்றத்துக்கு அனுமதிஇல்லை. ஆனால் அவர்கள் 36 பேரும் முறையான அனுமதிபெறாமல் மலையேற்றத்துக்கு சென்றுள்ளனர். வனத்துறையில் மலையேற்றத்திற்கு அனுமதி உள்ள இடங்களில் பாதுகாப்புடன் மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

குரங்கணியில் இருந்து 2 மலைப்பாதைகள் உண்டு. அதில் டாப்ஸ்டேசன் மலைப் பாதையும், கொழுக்கு மலைப் பாதையும் உண்டு. இதில் கொழுக்கு மலை வனப்பகுதிக்கு செல்ல அனுமதியில்லை. இது ஆட்கள் செல்ல தடைசெய்யப்பட்ட வனப்பகுதி. இந்த பகுதிக்கு சென்று திரும்பியவர்கள் காட்டுத்தீயில் சிக்கி உள்ளனர்.

இதில் காயம் அடைந்தவர்களுக்கு குரங்கணி, போடியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் தேனி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்து மலையேற்றுத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்படும். மேலும் வனத்துறையினருக்கு தெரியாமல் அவர்கள் மலையேற்றத்திற்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து முதல்-அமைச்சரும், துணை முதல்வரும், விபத்தில் சிக்கியவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உறவினர்களிடம் தெரிவித்தனர். டாக்டர்கள் 24 மணிநேரமும் இருந்து சிகிச்சை அளிப்பார்கள் என்று கூறினார்கள். அவர்களுடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், கலெக்டர்கள் வீரராகவராவ், பல்லவிபல்தேவ், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ், சரவணன், மாணிக்கம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியன், மருத்துவ நிலைய அதிகாரி காந்திமதிநாதன் ஆகியோர் உடன் சென்றனர்.

பின்பு, அப்பல்லோ ஆஸ்பத்திரி, மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவர்களையும் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் நேரில் சென்று பார்த்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com