

விருத்தாசலம்,
மங்கலம்பேட்டை அருகே கோணாங்குப்பம், பரூர், சின்னப்பரூர், பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெல் நடவு செய்தனர். நெற்பயிர்களுக்கு கிணறு மூலம் நீர் பாய்ச்சி வந்தனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டன. மேலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் கிணறுகளும் வறண்டன.
இதனால் விவசாயிகளால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. நீண்ட நாட்களாக தண்ணீர் பாய்ச்சாத காரணத்தால் நெற்பயிர்கள் தற்போது கருகிவருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பெரும் செலவு செய்து நெற்பயிர் நடவு செய்து பராமரித்து வந்தோம். பயிர்கள் நன்கு வளர்ந்து பூ பூத்து கதிர்வரும் நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவுக்கு பெய்யாத காரணத்தால் ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பவில்லை. சிறிதளவு இருந்த தண்ணீரும் கடும் வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக தற்போது வறண்டு விட்ட.ன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதால பாதாளத்துக்கு சென்றதால் எங்கள் நிலத்தில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டுவிட்டன.
இதன் காரணமாக நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாததால் அவை அனைத்தும் கருகிவருவதால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கருகிய நெற்பயிர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.