லட்சக்கணக்கில் பேரம்பேசி குழந்தைகள் விற்பனை: ஈரோட்டில் யார் யாருக்கு தொடர்பு? போலீசார் ரகசிய விசாரணை

லட்சக்கணக்கில் பேரம்பேசி குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் ஈரோட்டில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என்று போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லட்சக்கணக்கில் பேரம்பேசி குழந்தைகள் விற்பனை: ஈரோட்டில் யார் யாருக்கு தொடர்பு? போலீசார் ரகசிய விசாரணை
Published on

ஈரோடு,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தட்டான்குட்டை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு செவிலியர் அமுதவள்ளி என்பவர் லட்சக்கணக்கில் பேரம்பேசி குழந்தைகளை விற்றதாக ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கும், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.

தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர். இவருக்கும், அமுதவள்ளிக்கும் இடையே நீண்டகாலமாக பழக்கம் இருந்து வந்து உள்ளது. அதன்பேரில் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பெற்று விற்பனை செய்ய அமுதவள்ளியுடன் பர்வீனும் உடந்தையாக இருந்திருப்பது விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த தகவல் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் விற்பனை வழக்கில் பர்வீனை போல் ஈரோட்டை சேர்ந்த வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என்று போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சமீபத்தில் குழந்தைகளை தத்து எடுத்தவர்கள், வெளியூர்களுக்கு சென்று குழந்தைகளுடன் திரும்பியவர்கள் யாரேனும் உள்ளனரா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஈரோடு பகுதியில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் நடந்த பிரசவங்கள் குறித்தும், பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் தற்போதைய நிலவரம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதுபற்றி ஈரோடு மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமாமணி கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் இதுபோன்ற புகார்கள் எதுவும் இல்லை.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு புகார் வந்தபோது அது தொடர்பாக செவிலியர் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பின்னர் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன என்றார்.

ஈரோடு மாவட்ட துணை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, இந்த சம்பவம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் கூறும்போது, குழந்தைகள் விற்பனை வழக்கில் ஈரோட்டில் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடந்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் யாரும் அதுபோன்ற புகார்கள் தெரிவிக்கவில்லை.

இதுதொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக வந்து என்னை (மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு) தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com