தென்பெண்ணை ஆற்றில் லட்சுமி நரசிம்மசாமி சிலை கண்டெடுப்பு அதிகாரிகள் மீட்டு விசாரணை

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் லட்சுமி நரசிம்ம சாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்பெண்ணை ஆற்றில் லட்சுமி நரசிம்மசாமி சிலை கண்டெடுப்பு அதிகாரிகள் மீட்டு விசாரணை
Published on

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கோபசந்திரம் வெங்கடேஸ்வர சாமி கோவில் பின்புறம் தென்பெண்ணை ஆற்றில் நேற்று சிலர் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது, பாறைகளுக்கு நடுவே, ஒரு சாமி சிலை தென்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், சாமி சிலை குறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு வந்து, பாறைக்கு நடுவே இருந்த சிலையை மீட்டனர். அப்போது ஒன்றரை அடி உயரம் மற்றும் 25 கிலோ எடை கொண்ட அந்த சிலை, லட்சுமி நரசிம்ம சாமி சிலையாகும். பொதுமக்கள் அந்த சிலைக்கு அங்கேயே பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் சாமி சிலை, சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சிலை, ஐம்பொன்னால் ஆனதா? அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. விசாரணைக்கு பிறகு, அந்த சிலை, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாமி சிலையை தென்பெண்ணை ஆற்றில் பாறைகளுக்கு இடையே மறைத்து வைத்தவர்கள் குறித்து போலீசார் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் சாமி சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சிலை கிடைத்துள்ள தகவல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கவனத்திற்கும் சென்றுள்ளது. அவர் தலைமையிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com