சுடுகாடு நிலத்தை தி.மு.க. பிரமுகர் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு - போராட்டத்தில் ஈடுபட்டவரின் மனைவி தற்கொலை

கன்னிகாபுரம் ஊராட்சியில் சுடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
சுடுகாடு நிலத்தை தி.மு.க. பிரமுகர் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு - போராட்டத்தில் ஈடுபட்டவரின் மனைவி தற்கொலை
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள அண்ணாநகர் சுடுகாடு நிலத்தை ஊராட்சி மன்ற தலைவி லட்சுமியின் கணவரும், தி.மு.க. பிரமுகருமான முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முரளி ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பொதுமக்கள் சென்று முரளியிடம் நியாயம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது முரளி தரப்பினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முரளியின் சகோதரர் வேலு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் பொதுமக்களுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட செந்தில்குமார் மற்றும் உதயா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை கண்டித்து கடந்த 14-ந்தேதி திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை கன்னிகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில், முரளியின் சகோதரர் வேலுவை போலீசார் கைது செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த முரளி, அவரது மனைவி மற்றும் மாமியார் உள்ளிட்டோர் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோரை கூப்பிட்டு சுடுகாடு பிரச்சினைக்கு போராட்டம் நடத்தியது அல்லாமல் வேலுவை போலீசார் கைது செய்யும் அளவுக்கு பிரச்சினையை கொண்டு சென்ற உங்களை என்ன செய்கிறேன் என்று பொறுத்திருந்து பாருங்கள்! என மிரட்டியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

இதை பார்த்த அவரது உறவினர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக பிரியாவை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா நேற்று பரிதாபமாக இறந்துபோனார்.

இந்த நிலையில் பிரியாவின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். போலீசார் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை பிரியாவின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாசில்தார் விஜயலட்சுமி, வெங்கல் போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதனை ஏற்றுக்கொண்டு பிரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பலியான பிரியாவுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் சஞ்சய் (11) என்ற மகனும், 3-ம் வகுப்பு படிக்கும் சரோன் (8) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், வெங்கல் போலீசார் ஊராட்சி மன்ற தலைவி லட்சுமி, அவரது கணவர் முரளி உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com