லாரி மோதி பெண் படுகாயம் மணல் குவாரியில் கொட்டகைக்கு தீ வைப்பு தொழிலாளர்களை விரட்டியதால் பரபரப்பு

வெங்கல் அருகே சவுடு மண் ஏற்ற வந்த லாரி மோதியதில் பெண் படுகாயம் அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மணல் குவாரியில் இருந்த கொட்டகையை தீ வைத்து எரித்தனர். மேலும் அங்கிருந்த தொழிலாளர்களை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
லாரி மோதி பெண் படுகாயம் மணல் குவாரியில் கொட்டகைக்கு தீ வைப்பு தொழிலாளர்களை விரட்டியதால் பரபரப்பு
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள சிவன்வாயல் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் சவுடு மண் எடுக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை சார்பில் தனி நபருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து கடந்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி முதல் சவுடு மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. தினமும் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் நூற்றுக்கணக்கான லாரிகளில் பல அடி ஆழத்தில் சவுடு மண் அள்ளப்படுகிறது. இதனால் ஏரியில் ஆங்காங்கே பல அடி ஆழத்திற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

மழைக்காலங்களில் ஏரியில் தண்ணீர் தேங்கி நின்றால் இந்த பள்ளங்களில் கால்நடைகள் விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த வகையான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் குறை கூறுகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கிருஷ்ணா கால்வாய் மீது அதிக பாரம் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்ற லாரிகளை புலியூர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே நேற்று காலை சவுடு மண் ஏற்ற காவனூரில் இருந்து குவாரிக்கு லாரி ஒன்று சிவன்வாயல் காலனி அருகே வந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பத்மினி (வயது 48) என்பவர் மீது கண் இமைக்கும் நேரத்தில் லாரி மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் அவரது கால்கள் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பத்மினி உயிருக்கு போராடினார்.

கணவரை இழந்த பத்மினிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பத்மினிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கிராம மக்கள் ஒன்று கூடி லாரி டிரைவரை தாக்க முயன்றனர். அவர் தப்பி ஓடியதால் ஆத்திரம் அடைந்த கிராம பொதுமக்கள் மணல் குவாரி இயங்கும் ஏரிக்குள் புகுந்தனர். அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை கண் மூடித்தனமாக தாக்க முயன்றனர். பின்னர் அவர்களை விரட்டியடித்தனர்.

ஆத்திரம் தீராத பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்களை சமாதானம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com