வீட்டுக்குள் லாரி புகுந்தது; சுவர் இடிந்து 2 பெண்கள் படுகாயம்

பெரும்பாலை அருகேவீட்டுக் குள் லாரி புகுந்தது. சுவர் இடிந்து 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டுக்குள் லாரி புகுந்தது; சுவர் இடிந்து 2 பெண்கள் படுகாயம்
Published on

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக பெரும்பாலை பகுதியில் மின்கம்பங்கள் சேதமடைந்தன. அதை சீரமைக்க உதிரிபாகங்கள் மின்வாரிய லாரி மூலம் எடுத்து செல்லப்பட்டது. இந்த லாரியை டிரைவர் ராமச்சந்திரன் என்பவர் ஓட்டி சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட லாரி நாகாவதி அணை அருகே எல்லுக்குழி என்ற இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சரவணன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள் இருந்த சரவணனின் மனைவி பொன்னாத்தாள் (வயது 27), உறவினர் கண்ணம்மா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசாரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு இடிந்த வீட்டை சீரமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com