

புனே,
பழம்பெரும் இந்திப்பட நடிகை ரஞ்சிதா கவுர். லைலா மஜ்னு, அன்கியோன் கே ஜாராகோன் சே' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது புனேயில் வசித்து வருகிறார். இவரது கணவர் ராஜ் மசாந்த் (வயது68). இந்தநிலையில், ராஜ் மசாந்த் புனே கோரேகாவ் பார்க் போலீஸ் நிலையத்தில் மனைவி ரஞ்சிதா கவுர் மற்றும் மகன் ஸ்கை ஆகியோர் மீது பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார். அதில், சொத்து பிரச்சினை காரணமாக தனது மனைவி மற்றும் மகன் இருவரும் சேர்ந்து தன்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வருவதாக தெரிவித்து உள்ளார். மேலும் இருவரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் ரஞ்சிதா கவுர், அவரது மகன் ஸ்கை ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதுபற்றி ராஜ் மசாந்த் கூறுகையில், நான் வெளிநாட்டில் வசித்து வருகிறேன். ஒரு மாதத்துக்கு முன்னர் தான் புனே வந்தேன். அமைதியாக வாழலாம் என நினைத்திருந்தேன். ஆனால் எனது மனைவியும், மகனும் சொத்து பிரச்சினை காரணமாக என்னை துன்புறுத்தி வருகின்றனர். எனது மகன் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து அடிக்க வருகிறார். அதை எனது மனைவியும் ஊக்கப் படுத்துகிறார் என்றார்.