பியூட்டி பார்லர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் - அழகு கலை நிபுணர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

5 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதால் பியூட்டி பார்லர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என அழகுகலை நிபுணர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பியூட்டி பார்லர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் - அழகு கலை நிபுணர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு
Published on

வேலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஓட்டல்கள், நகைக்கடைகள், சலூன்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கியதாலும், சலூன்கடைகள் திறக்கப்படாததாலும் ஆண்கள் பலர் அதிக தலைமுடி மற்றும் தாடியுடன் சாமியார் போல் மாறி உள்ளனர். குழந்தைகளும் முடி வெட்ட முடியாமல் இருந்தனர். பல்வேறு வீடுகளில் பெற்றோரே தங்களின் குழந்தைகளுக்கு முடிவெட்டினர். எனினும் பலர் சலூன் கடை திறப்பிற்காக காத்துள்ளனர்.

இந்த நிலையில் 34 வகையான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதில் சலூன் கடைகள், ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், சலூன்கடைக்காரர்கள், அழகு நிலையத்தில் பணிபுரிபவர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் அனைத்திந்திய சிகை மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் அகிலா பானு, பொருளாளர் சுகந்தி மற்றும் நிர்வாகிகள் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 1,200 அழகு நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். மறைமுகமாகவும் பல தொழிலாளர்கள் இதை நம்பி உள்ளனர். இந்த ஊரடங்கு காரணமாக இங்கு பணிபுரிபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2 மாதத்துக்கு மேல் வேலையிழந்து உள்ளனர்.

எனவே அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தலா ரூ.15 ஆயிரம் என நிவாரண தொகை வழங்க வேண்டும். வருமானம் இல்லாததால் 6 மாதத்துக்கு வாடகை மற்றும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். பலர் வங்கியில் கடன் வாங்கி அழகு நிலையங்கள் நடத்துகின்றனர். எனவே கடன் தவணை செலுத்துவதில் 3 மாதங்கள் விலக்கு அளிக்க வேண்டும்.

பல தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி அளித்தால் அரசின் சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்றுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com