சொன்னதை நிச்சயம் செய்வோம்: ஒவ்வொரு வார்டிற்கும் தனித்தனி தேர்தல் வாக்குறுதிகள் - தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி பேச்சு

ஒவ்வொரு வார்டிற்கும் தனித்தனி தேர்தல் வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன. அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் என தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி பேசினார்.
சொன்னதை நிச்சயம் செய்வோம்: ஒவ்வொரு வார்டிற்கும் தனித்தனி தேர்தல் வாக்குறுதிகள் - தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி பேச்சு
Published on

மதுரை வடக்கு சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி தொகுதி முழுவதும் தீவிர சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உள்பட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் கோ.தளபதி நடந்து சென்றே மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது அதிகளவில் பெண்கள் திரண்டு நின்று ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர். நேற்று கோ.தளபதி 42வது வார்டுக்காக சொக்கிகுளம் பி.டி.ராஜன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அந்த தொகுதி மக்களுக்கான தேர்தல் வாக்குறுதி நோட்டீசை வீடு, வீடாக சென்று வழங்கினார்.

பிரசாரத்தின் போது கோ.தளபதி பேசியதாவது:

கடந்த 10 ஆண்டு கால இருண்ட ஆட்சி அகன்று உதயசூரியன் உதிக்க போகிறது. மக்கள் ஸ்டாலின் தான் முதல்அமைச்சர் ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். மக்களின் எண்ணம் நிறைவேற போகிறது. ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் தேர்தலின் போது அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். மதுரை வடக்கு தொகுதியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.

பொதுவாக எல்லோரும் ஒரு தொகுதிக்கு தான் தேர்தல் வாக்குறுதி தருவார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை ஒவ்வொரு வார்டுக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கிறது. அதனை அறிந்து ஒவ்வொரு வார்டிற்கும் தனித்தனி தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளன. மக்களின் தேவை அறிந்து இந்த வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன். நாங்கள் சொன்னதை நிச்சயம் செய்வோம்.

இந்த 42வது வார்டை பொறுத்தவரை அனைத்து சாலைகளிலும் கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. கழிவு நீர் சீராக செல்வதில்லை. எனவே இந்த பிரச்சினை போர்கால அடிப்படையில் தீர்க்கப்படும். அதே போல் இந்த வார்டில் குறைந்தளவே முதியோர் உதவி தொகை வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். எனவே விடுதலின்றி அதிகளவில் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய சாலைகள் கூட மேடும், பள்ளமாக உள்ளது.

இந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். பெரும்பாலான இடங்களில் குடிநீர் சரியாக வருவதில்லை என புகார் கூறியுள்ளனர். எனவே அனைத்து வீடுகளிலும் குடிநீர் வழங்கப்படும். நூலகமும், நவீன சமுதாய கூடமும் கட்டி தரப்படும். செல்லூர் கண்மாய் தூர்வாரப்பட்டு தடுப்புசுவர் கட்டப்படும். இலவச வீட்டு மனை பட்டா வழங்க வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com