2-ம் நிலை காவலர் பணி: மருத்துவ பரிசோதனையில் 99 பேர் பங்கேற்பு

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த 2-ம் நிலை காவலர் பணிக்கான மருத்துவ பரிசோதனையில் 99 பேர் பங்கேற்றனர். செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் நடந்த கண்பரிசோதனையால் சிலர் அவதியடைந்தனர்.
2-ம் நிலை காவலர் பணி: மருத்துவ பரிசோதனையில் 99 பேர் பங்கேற்பு
Published on

வேலூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரத்து 91 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆண், பெண் காவலர்களுக்கு தனித்தனியாக 2 கட்டங்களாக உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் 1,500 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல், குண்டு எறிதல் ஆகியவை நடத்தப்பட்டன.

இதில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 577 ஆண்கள், 190 பெண்கள் என மொத்தம் 767 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் கடந்த 11-ந் தேதி வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் வைத்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் கலந்து கொள்ளும்படி 100 ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவர்களுக்கு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மருத்துவ பரிசோதனை நேற்று நடந்தது. அவர்களை கண், ரத்தம், இதயம், பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த டாக்டர்கள் பாலசுப்பிரமணியம், யுவராஜ், யோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். இதனை ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கண்காணிப்பாளர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் நவீன் யுவராஜ் மற்றும் போலீசார் மேற்பார்வையிட்டனர்.

மருத்துவ பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 100 பேரில் 99 பேர் பங்கேற்றனர். ஒருவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இன்று (வெள்ளிக்கிழமை) 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ந் தேதி வரை மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண் பரிசோதனை நடைபெற்ற போது திடீரென அங்கு மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீஸ் ஒருவர் தனது செல்போன் டார்ச்லைட் மூலம் எழுத்துக்கள் மீது வெளிச்சம் காண்பித்தார். அந்த வெளிச்சத்தில் சிலருக்கு கண் பரிசோதனை நடைபெற்றது.

சிறிது நேரத்திற்கு பின்னர் மின்சாரம் வந்ததைதொடர்ந்து மின்விளக்குகள் வெளிச்சத்தில் கண் பரிசோதனை நடந்தது. மின்தடை நேரத்தில் நடந்த கண் பரிசோதனையால் சிலர் அவதியடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com