

சேலம்,
உலக சுற்றுலா தினவிழாவையொட்டி சேலம் மகாத்மாகாந்தி மைதானத்தில் நேற்று அரசு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாரை தப்பட்டை முழங்க தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் அடங்கிய கையேடுகளையும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சென்றனர்.
மாநிலத்தின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில் விழிப்புணர்வு வாகனங்களும் சென்றன. மேலும் வடமாநிலத்தை சேர்ந்த நடன கலைஞர்கள் நடனமாடி சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. காந்தி மைதானத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் தொங்கும் பூங்கா, குமாரசாமிப்பட்டி வழியாக அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை சென்றடைந்தது. விழாவில் கலெக்டர் ராமன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சுற்றுலாத்துறை இந்தியாவில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து சிறப்பாக தன்னுடைய பணியை செய்து வருகிறது. உலக சுற்றுலா தின விழா திருச்சி, மதுரை மாவட்டங்களை தொடர்ந்து இந்தாண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் கொண்டாடி உள்ளோம்.
எந்தெந்த பகுதிகளில் சுற்றுலாத்துறையில் நிறை, குறைகள் இருக்கின்றதோ அதை வருகிற நிதியாண்டில் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த பணிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாவட்டத்தில் முக்கிய இடங்களை கண்டறிந்து அவற்றை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சேலம் மாவட்டம் சுற்றுலாத்துறையில் ஒரு முன்மாதிரி மாவட்டமாக உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
மேட்டூர் அணையை சுற்றிலும் விரைவில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கப்படும். சுற்றுலாத்துறை பொருத்தமட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 40 சதவீதம் பேர் மருத்துவத்திற்காக தமிழகத்துக்கு வருகின்றனர். வெளிமாநில, வெளிநாடு மற்றும் மாவட்ட சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.