

ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முப்பந்தல், குமாரபுரம், ஆவரைகுளம் போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான காற்றாலைகள் இயங்கி வருகிறது. நேற்று மாலையில் இந்த பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது குமாரபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு காற்றாலையில் மின்னல் தாக்கி தீப்பிடித்தது. நேரம் செல்ல செல்ல தீ மள...மள...வென எரிய தொடங்கியது. மேலும், காற்றாலையில் இருந்து கரும்புகை வெளிவந்து கொண்டிருந்தது.
போராடி அணைத்தனர்
இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பிரதீப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், தீயில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் தனித்தனியாக கருகி கீழே விழுந்தன. இதன் சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.