ராணுவ வீரர்களுக்கு வழங்குவதுபோல் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் - எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர் எச்.கே.பட்டீல் கடிதம்

ராணுவ வீரர்களுக்கு வழங்குவதுபோல் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர் எச்.கே.பட்டீல் கடிதம் எழுதியுள்ளார்.
ராணுவ வீரர்களுக்கு வழங்குவதுபோல் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் - எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர் எச்.கே.பட்டீல் கடிதம்
Published on

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் உலக அளவில் வேகமாக பரவி மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. நமது கர்நாடகத்திலும் அந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது நம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதை தடுப்பது தொடர்பாக நான் பல்வேறு கடிதங்களை எழுதி ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். அது உங்களின் கவனத்தில் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

உயிரை பணயம் வைத்து...

கொரோனாவுக்கு எதிராக லட்சக்கணக்கானோர் போராடி வருகிறார்கள். சிலர் தானம், சேவை மூலம் போராடுகிறார்கள். மற்ற சிலர் தங்களின் உயிரை பொருட் படுத்தாமல் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு போர். தேசபக்தியை நமது மக்கள் சேவைகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், ஊடகத்தினர் ஆற்றி வரும் சேவை பாராட்டுக்குரியவை. இவர்களின் சேவை, தியாகம், தைரியம் அமோகமானது. இவர்கள் அனைவரும் வைரசின் பாதிப்பை தெரிந்தும், தங்களின் உயிரை பணயம் வைத்து களத்தில் போராடுகிறார்கள்.

தியாக பட்டம்

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அரசின் கடமை. கைகளை தட்டி ஒலி எழுப்பினால் போதாது. அவர்களுக்கு சிறப்பு மரியாதை வழங்க வேண்டும். நமது நாட்டு எல்லையில் நின்று போராடும் ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் கவுரவம் உள்ளிட்ட அனைத்து மரியாதையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

சேவை பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்களுக்கு தியாகி பட்டம் வழங்கி ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். இந்த போராட்டத்தில் அவர்களுக்கோ அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் ஓய்வு காலம் வரை தொடர்ந்து சம்பளம் வழங்க வேண்டும். இத்தகைய சலுகைகளை ஒடிசா மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

ரூ.1 கோடி காப்பீடு

நம்மை பாதுகாக்க பகல்-இரவு என்று பாராமல் டாக்டர்கள் உள்பட சுகாதாரத்துறை ஊழியர்கள், ஊடகத்தினரின் வாழ்க்கை பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ரூ.1 கோடி காப்பீடு வழங்க வேண்டும். அவர்களுக்கு சிறப்பு திட்ட தொகுப்பை கர்நாடக அரசு உடனே அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு எச்.கே.பட்டீல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com