

பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் சேஷாத்திரிபுரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
60 மேற்பார்வையாளர்கள்
எங்கள் கட்சியின் சுரேஷ்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மண்டலத்திற்கு ஒருவர் வீதம் 4 மண்டலங்களுக்கு 4 எம்.எல்.சி.க்கள் பொறுப்பாளர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர பெங்களூரு நகருக்கு என்று தனியாக ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது ஒரு மாவட்டத்திற்கு 2 பேர் வீதம் 30 மாவட்டங்களுக்கு 60 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மேற்பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, பூத் மட்டத்தில் இருந்து அனைத்து நிலையிலும் நிர்வாகிகளை நியமனம் செய்வார்கள். இதற்கான முழு அதிகாரத்தை நான் அவர்களுக்கு வழங்கியுள்ளேன். பூத் மட்டத்தில் அந்த பகுதியில் பெரும்பான்மையாக உள்ள சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன். எவ்வாறு நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்தும் சில வழிகாட்டு நெறிமுறைகளை அவர்களுக்கு உருவாக்கி கொடுத்துள்ளோம்.
தேர்தல் பிரசார குழு
வருகிற 31-ந் தேதிக்குள் இந்த பணிகளை செய்து முடிக்கும்படி மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு பூத் கமிட்டியில் 15 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். கர்நாடகத்தில் எங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த புதிய மாற்றங்களை செய்கிறேன். நானும், தேவேகவுடாவும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதிலேயே அதிக நேரத்தை செலவழிப்பதாகவும், களத்தில் பணியாற்ற ஆர்வம் காட்டுவது இல்லை என்றும் விமர்சனம் எழுகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தலைவருக்குரிய அதிகாரத்தை பிரித்து கொடுத்து அவற்றை பரவலாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் தேர்தல் பிரசார குழு அமைக்க உள்ளோம். தேவேகவுடாவுடன் ஆலோசித்த பிறகு இந்த பிரசார குழு அறிவிக்கப்படும். எங்கள் கட்சியில் இருந்து சில தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர்.
நிர்வாகிகளுக்கு பதவி உயர்வு
அவர்களுக்கு பதிலாக புதிய தலைவர்களை உருவாக்கும் பணியிலும் நாங்கள் ஈடு பட்டுள்ளோம். தொகுதிகளில் சிறப்பான முறையில் செயல் படும் நிர்வாகிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படும். 150 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து தேவேகவுடாவிடம் கொடுத்துள்ளேன். அந்த பட்டியலை ஏற்கனவே வெளியிட முடிவு செய்து இருந்தோம்.
ஆனால் இன்னும் சில தொகுதிகளில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படவில்லை. இந்த நிர்வாகிகள் நியமன பணிகளை செய்து முடிக்கும்படி தேவேகவுடா உத்தரவிட்டுள்ளார். அதனால் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும்.
யாருக்கு டிக்கெட்
தொகுதிகளில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபடும்படி அவர்களிடம் நான் கூறியுள்ளேன். அவர்கள் தீவிரமாக கட்சி பணியாற்ற வேண்டும். அவர்கள் கட்சி பணி ஆற்றுவதில் சோம்பலாக செயல்பட்டால் அவர்களுக்கு பதிலாக வேறு நிர்வாகிகளுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.