சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த வளர்ப்பு தந்தை கைது

சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டார்.
சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த வளர்ப்பு தந்தை கைது
Published on

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலத்தில் வாத்துப் பண்ணையில் 5 சிறுமிகள் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து குழந்தைகள் நலக்குழுவினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த 5 சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில், வாத்துப்பண்ணை உரிமையாளர் மற்றும் சிலர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவினர் அளித்த புகாரின்பேரில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மேற்பார்வையில் சிறப்பு விசாரணை அதிகாரியாக பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சிறுமிகளை சீரழித்ததாக கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் (வயது 53), அவரது மகன் ராஜ்குமார் (27), உறவினர் பசுபதி, அய்யனார் (23), வானூர் வேட்டைக்காரர்களான சிவா, மூர்த்தி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் வாத்துப்பண்ணை உரிமையாளர் உள்பட 6 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பேரில் காலாப்பட்டு சிறையில் இருந்து வாத்துப்பண்ணை உரிமையாளர், அவரது மகன் உள்பட 6 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

மேலும் காட்டேரிக்குப்பம், கீழ்சாத்தமங்கலம், கோர்க்காடு ஆகிய பகுதிகளுக்கு அவர் களை அழைத்துச் சென்று சிறுமிகள் தங்க வைக்கப்பட்ட இடத்திலும் விசாரிக்கப்பட்டது. இதன் முடிவில் சிறுமிகள் எந்தந்த வகையில் துன்புறுத்தப்பட்டனர், யார் யாருக்கு தொடர்பு உள்ளது? போன்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சிறுமிகளில் இருவரின் வளர்ப்பு தந்தையான மதகடிப்பட்டு அருகே உள்ள ஆழியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது55) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஆறுமுகத்தை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே நல்லவாடு பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்ட சிறுமிகளின் தாய் சாந்தி கொலைக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாமா? என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதுகுறித்து சாந்தி கொலையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூபாலனிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com