உள்ளூர் ஊரடங்கையொட்டி தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

புதுவையில் உள்ளூர் ஊரடங்கிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
உள்ளூர் ஊரடங்கையொட்டி தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரம்
Published on

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் தொற்று பரவும் வேகம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் மட்டும் ஒரு வாரம் ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக புதுவை நகர பகுதியில் 32 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக இந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் மேற்பார்வையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் மூடப்பட வேண்டும். பொதுமக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை திறந்திருக்கும்.

ஊரடங்கு பகுதியில் அத்தியாவசிய சேவைகள் (அவசர மருத்துவ சேவை உள்பட) மற்றும் அரசாங்க அலுவல்களை தவிர மற்ற மக்கள் நடமாட்டம் சோதனை நடத்தப்படாமல் அனுமதிக்கப்படாது. அத்தியாவசிய தேவைக்கு அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் தவிர ஊரடங்கு மண்டலங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட மாட்டாது.

அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் பாலகங்கள் ஆகியவை இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இவைகளை தவிர்த்து வெளியில் இருந்து மக்கள் ஊரடங்கு மண்டலங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com