அரசு விழாக்களில் உள்ளூர் எம்.எல்.ஏ.க்களே தலைமை தாங்க வேண்டும் - சட்டசபையில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தகவல்

அரசு விழாக்களில் உள்ளூர் எம்.எல்.ஏ.க்களே தலைமை தாங்க வேண்டும் என்று சட்டசபையில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
அரசு விழாக்களில் உள்ளூர் எம்.எல்.ஏ.க்களே தலைமை தாங்க வேண்டும் - சட்டசபையில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தகவல்
Published on

பெலகாவி,

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மத்திய மந்திரி அனந்தகுமார், முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்ஷெரீப், நடிகர் அம்பரீஷ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், சபையின் 3-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு பெலகாவி சுவர்ண சவுதாவில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற பூஜ்ஜிய நேரத்தில் உறுப்பினர் ராஜேஸ்நாயக் கேட்ட கேள்விக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

போலீசாருக்கு சட்டம் முக்கியம். சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்ற வேண்டியது போலீசாரின் கடமை ஆகும். அரசு விழாக்களில் உள்ளூர் எம்.எல்.ஏ.க்களே தலைமை தாங்க வேண்டும்.

அந்த உறுப்பினரின் தொகுதியில் நடைபெற்ற விழாவில் என்ன நடந்தது என்பது குறித்து விவரங்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

அப்போது நகர வளர்ச்சித்துறை மந்திரி யு.டி.காதர் பேசுகையில், அரசு விழாக்கள் உள்ளூர் எம்.எல்.ஏ.க்களின் தலைமையில் நடைபெற வேண்டும். தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தொகுதியில் இந்திரா உணவகம் திறப்பு விழாவில் 2 தரப்பில் இருந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோல் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

முன்னதாக பேசிய உறுப்பினர் ராஜேஸ்நாயக், பண்ட்வாலில் நடைபெற்ற விழாவில் மந்திரி முன்னிலையிலேயே என்னை அவமானப்படுத்தினர். எனக்கு எதிராக சிலர் ரவுடிகளை போல் செயல்பட்டனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com