நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைகள் அடைப்பு, சாலைகள் வெறிச்சோடின-போலீசார் தீவிர கண்காணிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி நேற்று கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடின. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைகள் அடைப்பு, சாலைகள் வெறிச்சோடின-போலீசார் தீவிர கண்காணிப்பு
Published on

நாமக்கல்:

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2-வது ஞாயிற்றுக்கிழமையாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி பொது போக்குவரத்து இருக்காது என அறிவிக்கப்பட்டு இருந்ததால், அனைத்து அரசு பஸ்களும் டெப்போக்களிலேயே நிறுத்தப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. லாரிகளும் மிக குறைவான அளவிலேயே இயக்கப்பட்டன. இதனால் தேசிய நெடுஞ்சாலை, பஸ்நிலையங்கள் வெறிச்சோடி கிடந்தன.

நாமக்கல் நகரை பொறுத்த வரையில் பிரதான சாலை, திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை, மோகனூர் சாலை, சேந்தமங்கலம் சாலை உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதியும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. அரசின் உத்தரவுபடி மதுபான கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

போலீசார் எச்சரிக்கை

லாரி பட்டறைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. மருந்து கடைகள், ஆவின் பாலகம், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம். மையங்கள் மட்டுமே திறந்து இருந்தன. இவற்றிலும் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஓட்டல்களை பொறுத்த வரையில் ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறந்து இருந்தன. அவற்றிலும் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினர்.

நகர் முழுவதும் போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களிடம் எங்கு செல்கிறீர்கள்? என விசாரித்து அனுப்பி வைத்தனர். தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த இளைஞர்களை அவர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினர். முககவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இறைச்சி விற்பனை

முழு ஊரடங்கையொட்டி இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் காலை 6 மணி வரை இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதை காண முடிந்தது.

இதேபோல் மோகனூர், கந்தம்பாளையம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம், சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை என மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com