சங்கரன்கோவில் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் 40-வது நாளாக வேலைநிறுத்தம்

சங்கரன்கோவில் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று 40-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்மூலம் ரூ.2 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
சங்கரன்கோவில் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் 40-வது நாளாக வேலைநிறுத்தம்
Published on

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது சுப்புலாபுரம் கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வருகின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் 75 சதவீத கூலி உயர்வு, விடுமுறை சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.300 வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் நேற்று 40-வது நாளாக நீடித்தது. இதுதொடர்பாக நெல்லை, மதுரை தொழிலாளர் நல அலுவலகங்களில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், இதுவரை தீர்வு ஏற்படவில்லை. இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, இதுவரை ரூ.2 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று காலை சுப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்கள் பேரவை தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் விசைத்தறி பாக்டரி தொழிலாளர்கள் சங்க தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்கள் பேரவை செயலாளர் சரவணன், பொருளாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தில் பெண்கள் உள்பட விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com