

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூந்தோட்ட நகர், சீனிவாசபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 74). இவரது மனைவி பானுமதி (66). இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஆறுமுகம் தனது மனைவி பானுமதியை அழைத்துக்கொண்டு ஆவடிக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகம் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.