போலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகளை கொள்ளையடித்த 11 பேருக்கு 10 ஆண்டு சிறை - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு

ஆண்டிமடம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து துப்பாக்கிகளை கொள்ளையடித்த வழக்கில் 11 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
போலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகளை கொள்ளையடித்த 11 பேருக்கு 10 ஆண்டு சிறை - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
Published on

பூந்தமல்லி,

1997-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்துக்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்த கும்பல், போலீஸ் காரர்களை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு போலீஸ் நிலையத்தில் இருந்த பெரிய துப்பாக்கிகள், சீருடைகள், துப்பாக்கி தோட்டாக்கள், வாக்கி- டாக்கி உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாக சூ என்ற சுந்தரம், வெங்கடேசன், ரவிச்சந்திரன், முருகையன், சுந்தரமூர்த்தி, ஜெயச்சந்திரன், சேகர், சரவணன், நாகராஜன், செங்குட்டுவன், ஜான் பீட்டர், உத்திரபதி, பொன்னிவளவன், நடராஜன், வீரையா ஆகிய 15 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போதே சுந்தரம், சரவணன், உத்திரபதி ஆகியோர் இறந்துவிட்டனர். வீரையா, அப்ரூவர் ஆகிவிட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை இந்த வழக்கில் நீதிபதி செந்தூர்பாண்டி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் குற்றவாளிகள் எனவும், தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து மாலையில் குற்றவாளிகள் 11 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் விஜயராஜ் ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com