திருப்பூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடத்தொடங்கின - தொழில்துறையினர் மகிழ்ச்சி

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடத்தொடங்கின. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடத்தொடங்கின - தொழில்துறையினர் மகிழ்ச்சி
Published on

திருப்பூர்,

டீசல், பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் கடந்த 20-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்ததன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்திலும் லாரிகள் இயங்காததால் பின்னலாடை சரக்குகள், தேங்காய் எண்ணெய், கறிக்கோழி போன்றவை வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்க முடியாமல் தேக்கமடைந்தன. இதனால் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மத்திய அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து லாரிகள் நேற்று ஓடத்தொடங்கின. திருப்பூர் மாவட்டத்திலும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் மற்றும் திருப்பூர் கூட்செட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரிகள் நேற்று காலை முதலே ஓடத்தொடங்கின. இதனால் கூட்செட் பகுதி லாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், லாரி புக்கிங் அலுவலகங்கள், பின்னலாடை நிறுவனங்கள் உள்பட பல்வேறு பகுதிகளிலும் தேக்கமடைந்த சரக்குகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றி, அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பின்னலாடை சரக்குகளும் சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 8 நாட்களாக தேக்கமடைந்த பின்னலாடை சரக்குகள், தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com