பொங்கலூரில் மொபட் மீது லாரி மோதல்; ஓட்டல் அதிபர் பலி

பொங்கலூரில் மொபட் மீது லாரி மோதியதில் ஓட்டல் அதிபர் பலியானார்.
பொங்கலூரில் மொபட் மீது லாரி மோதல்; ஓட்டல் அதிபர் பலி
Published on

பொங்கலூர்,

பொங்கலூரில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டல் அதிபர் பலியானார். இதையடுத்து அந்த சாலையில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஏ.எல்.ஆர். லே அவுட்டை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 50). பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று காலை தனது மொபட்டில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேவணம்பாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார்.

அப்போது கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக கந்தசாமி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் திரண்ட பொதுமக்கள் பொங்கலூர் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுவதாகவும், எனவே தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் பிரிவு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி முன் பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரி திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் அப்படியே நின்றது.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு (பயிற்சி) நவீன்குமார், அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தபட்ட இரண்டு இடங்களிலும் வேகத்தடைகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து உடனடியாக சரி செய்யப்பட்டது.

இந்த விபத்து நடந்து முடிந்த அதே இடத்தில் 2 மணி நேரத்தில் மற்றொரு விபத்து நடந்து உள்ளது. அதாவது தேவணம்பாளையம் சாலையில் இருந்து ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தெற்கு நோக்கி சென்றார்.

அப்போது திருச்சியில் இருந்து கோவை நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு கால் முறிந்தது. சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். பொங்கலூர் வழியாக செல்லும் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதாலும், தற்போது புதிதாக போடப்பட்ட சாலையின் இரண்டு புறங்களிலும் மண் கொட்டப்படாததால் அதிக உயரத்தில் உள்ள சாலையில் கீழே இறங்க முடியாமல் பலரும் விபத்தில் சிக்கி உயிரிழப்பு மற்றும் பலத்த காயம் அடைந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com