

நாமக்கல்,
வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பிய லாரி டிரைவர்கள் தாங்களாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றி சென்று வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இல்லாத நிலையிலும், தாமாகவே அரசு மருத்துவமனையில் தான் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்ததால், தனக்கு பரிசோதனை செய்து கொண்டார். மேலும் தன்னுடன் லாரியில் வந்த கூடுதல் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களையும் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் சென்று உள்ளார். இவரது சிறந்த முன் உதாரணமான செயல்பாடு மிகுந்த பாராட்டுக்கு உரியதாகும்.
கொரோனா நோய் தொற்று தற்போது அதன் அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட எந்த ஒரு அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் பரவும் நிலை உள்ளதால், வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த லாரி டிரைவர்கள் தாங்களாகவே நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த டிரைவர்கள் தங்களுக்கு உள்ள உடல் ஆரோக்கிய நிலையினால் நோய் தொற்றின் அறிகுறி வெளியே தெரியாவிட்டாலும், இவர்களது வீட்டில் உள்ள முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் தொற்றினை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே பொதுமக்கள் காய்ச்சலுக்கு தாங்களாகவே மருத்துவம் செய்து கொள்ள கூடாது.
காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புடன் இருந்து, நோய் தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.