

நாமக்கல்,
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மகாசபை கூட்டம் கடந்த மாதம் 27-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தலைவர் நல்லதம்பி, மகாசபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை. எனவே கூட்டத்தை நடத்த போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என சங்க நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் மனு கொடுத்தனர்.
இந்த பிரச்சினை குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார். இதையடுத்து மகாசபை கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஒத்திவைக்கப்பட்ட நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மகாசபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் வாங்கிலி தலைமை தாங்கினார். செயலாளர் அருள், துணைத்தலைவர் சுப்புரத்தினம், துணை செயலாளர் ஆனந்தன், பொருளாளர் சீரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் சிலர் சங்கத்தின் வரவு-செலவு தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து சங்கத்தின் செயலாளர் அருள், சங்கம் சார்பில் செய்யப்பட்ட செயல்பாடுகள், செலவுகள், கடன் எவ்வளவு அடைக்கப்பட்டுள்ளது, எதிர்கால திட்டம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்து பேசினார்.
தொடர்ந்து தலைவர் வாங்கிலி பேசினார். அப்போது அவர், முன்னாள் தலைவர் நல்லதம்பி பெயரை குறிப்பிட்டு, சில கருத்துகளை சொல்ல முற்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ஆதரவாளர்கள் அவரை வெளியே வைத்துக்கொண்டு அவரைபற்றி பேசக்கூடாது என கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்களை நிர்வாகிகள் சமரசம் செய்தனர்.
தொடர்ந்து தலைவர் வாங்கிலி பேசினார். அப்போது முன்னாள் தலைவர் நல்லதம்பி ஆதரவு உறுப்பினர்கள் சிலர் தலைவர், செயலாளர் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தால் எப்படி? உறுப்பினர்களின் கருத்தையும் கேட்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள் சிலர் செயற்குழு கூட்டத்தில் முன்னாள் தலைவர் நல்லதம்பியை சங்கத்தில் இருந்து நீக்கம் செய்ய காரணம் என்ன? என கேள்வி எழுப்பினர். அத்துடன் அவரை சங்கத்தில் இருந்து நீக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மேடைக்கு அருகே திரண்டு வந்தும், மேடை மீது ஏறியும் கோஷங்கள் எழுப்பியதுடன் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இது முற்றியதில் உறுப்பினர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எனவே சிறப்பு விருந்தினர்கள் யாரும் பேசாத நிலையில் நாட்டுப்பண் ஒலிக்க செய்து கூட்டத்தை முடித்துக்கொள்ள நிர்வாகிகள் முடிவு செய்தனர். ஆனால் கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்காமல் எப்படி நாட்டுப்பண் ஒலிக்க செய்வது என அதற்கும் சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் தன்ராஜ், தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம், நாமக்கல் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டம் குறித்து சங்க தலைவர் வாங்கிலி கூறும் போது, முன்னாள் தலைவர் நல்லதம்பியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது, நாங்கள் நீக்கியது செல்லாது என்றால் அவர் நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்றார்.
அதே நேரத்தில், சங்க துணை செயலாளர் ஆனந்தன் கூறும் போது, முன்னாள் தலைவர் நல்லதம்பியை நீக்கியது மட்டுமல்ல, இந்த கூட்டமே செல்லாது என்றார்.