கரும்பு விவசாயிகளுக்கு நஷ்டம் - குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முறையீடு

அமராவதி சர்க்கரை ஆலை எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கரும்பை வாங்காததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.
கரும்பு விவசாயிகளுக்கு நஷ்டம் - குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முறையீடு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் முன்னிலை வகித்தார். விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்து கூட்டத்தில் முறையிட்டனர்.

ஈஸ்வரமூர்த்தி(உழவர் உழைப்பாளர் கட்சி):-

அமராவதி கரும்பு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்காக மாவட்டத்தில் 3,200 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகளை விவசாயிகள் பதிவு செய்தனர். இந்த ஆண்டு சர்க்கரை ஆலையின் எந்திரத்தில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டதால் கரும்பு அரவை பணி பெருமளவு பாதிக்கப்பட்டது. வழக்கமாக 90 நாட்கள் ஓடும் ஆலை இந்த ஆண்டு 40 நாட்கள் மட்டுமே இயங்கியுள்ளது. பயிரிட்ட கரும்புகளை வெட்டி ஆலைக்கு கொண்டு செல்ல முடியாமல் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்துள்ளனர். அதாவது ஒரு விவசாயியிடம் இருந்து 50 டன் கரும்புகள் வாங்குவதற்கு பதிவு செய்யப்பட்டு இருந்தால், வெறும் 28 டன் கரும்பை மட்டுமே ஆலை நிர்வாகம் வாங்கியுள்ளது.

ஆலை செயல்படாததால் கரும்பு வாங்காத காரணத்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதுபோல் வெட்டிய கரும்புக்கான தொகையை கூட 1 மாதத்துக்கு மேல் ஆகியும் வழங்கப்படாமல் இருக்கிறது. 16 நாட்களுக்குள் பணத்தை கொடுக்க வேண்டும் என்பதே விதி. இவ்வாறு அமராவதி சர்க்கரை ஆலையில் எந்திர கோளாறு காரணமாக செயல்படாமல் இருந்தால் தனியார் ஆலை நிர்வாகத்திடம் விவசாயிகள் கரும்பை கொடுக்க வேண்டிய நிலை உருவாகும். அடுத்த ஆண்டு அமராவதி கரும்பு சர்க்கரை ஆலை முழுவீச்சில் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தினாலும், ஒரு வாரம் கழித்தே மீண்டும் நகைக்கடன் வழங்குகிறார்கள். உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அலங்கியம் ஆயக்கட்டு பகுதியில் விவசாயிகள் கிணறு தோண்டுவதற்கு கோர்ட்டு தடை உள்ளதாக கூறி அனுமதி மறுக்கிறார்கள். கிணறு தோண்டுவதற்கான அனுமதியை பெற்றுத்தர வேண்டும்.

மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார்:-

கூட்டுறவு வங்கியில் நகைக்கடனை உடனே வழங்குவதற்கு இணை பதிவாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அலங்கியம் ஆயக்கட்டு பகுதியில் கிணறு அமைக்க தடை ஏதேனும் இருந்தால் அவற்றை அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி, முறைப்படுத்தி கிணறு தோண்டுவதற்கான அனுமதி பெற்றுத்தரப்படும்.

விவசாயி பழனிசாமி:-

வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டுவருவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் 2 பேர் ஆய்வு நடத்தினார்கள். தற்போது எந்தநிலையில் உள்ளது?.

கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி:- வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. தொடர்ந்து அதை கண்காணித்து வருகிறோம்.

பரமசிவம்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்):-

ஆவின் பால் கொள்முதல் நிலையங்களில் பாலின் தரம் அறிய எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளிடம் இருந்து பாலை எந்திரத்தின் மூலம் தரம் பார்த்து கொள்முதல் செய்கிறார்கள். இது எளிமையாக உள்ளது. அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் பாலின் தரம் அறியும் எந்திரம் அமைக்க வேண்டும். தீபாலப்பட்டி அருகே பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரிசல் மண்ணாக இருப்பதால் கரையோரம் அடிக்கடி உடைந்து விடுகிறது. தண்ணீர் வீணாவதால் இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் கிணறு தோண்ட அனுமதி வழங்க வேண்டும். உடுமலையில் உழவர் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு 1,000 விவசாயிகள் அதில் உள்ளனர். இந்த குழுவுக்கு உழவர் சந்தையில் ஒரு கடை ஒதுக்கீடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும். எரிசனம்பட்டி பகுதியில் வீடு மற்றும் தோட்டங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தளி போலீஸ் நிலைய போலீசாரே இங்கு வர வேண்டியுள்ளது. எல்லை பரப்பு அதிகமாக இருப்பதால் எரிசனம்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி:- உழவர் ஆர்வலர் குழுவுக்கு உடுமலை உழவர் சந்தையில் ஒரு கடை ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும். தீபாலப்பட்டி பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் கரையை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.

விரைவில் பணி மேற்கொள்ளப்படும். எரிசனம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து திருட்டு சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கையை உடுமலை ஆர்.டி.ஓ., காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மதுசூதனன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்):-

மாட்டுத்தீவனத்தின் விலை உயர்ந்து விட்டது. இதனால் பால் கொள்முதல் விலையை உயர்த்திக்கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானியவிலையில் தீவனம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கொப்பரையை கொள்முதல் செய்வதை போல் விவசாயிகளிடம் தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். பெருமாநல்லூரில் உயர்மின் கோபுர பாதை அமைப்பில் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

உடுமலை பகுதியில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றி தொந்தரவு அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முடிய பணம் கொடுத்து விட்டார்கள். அதன்பிறகு பணம் வழங்கப்படாமல் உள்ளது. பணத்தை உடனடியாக கிடைக்கச்செய்ய வேண்டும்.

கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி:-

காட்டுப்பன்றி தொந்தரவு தொடர்பாக வனத்துறையிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு பணத்தை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். நேற்று நடந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 87 மனுக்கள் பெறப்பட்டன. இதில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரபு, துணை கலெக்டர் (பயிற்சி) விஷ்ணவர்த்தினி, இணை இயக்குனர்(வேளாண்மை) வளர்மதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஆனந்தகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com