

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பல்லவர் மேடு பகுதியில் வசிப்பவர் திருமால். இவர் ஏ.சி. மெக்கானிக்காக இருந்து வருகிறார். இவரது மனைவி அகிலா என்கிற அகிலாண்டேஸ்வரி (வயது 22). இவர்கள் காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். வேதவர்ஷினி (5) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதையடுத்து, காதல் திருமணம் செய்து கொண்ட அகிலாவும், திருமாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் திருமால் அடிக்கடி குடித்துவிட்டு, அகிலாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் நேற்று வழக்கம்போல் திருமால், அகிலாவிடம் சண்டை போட்டார். இதனால், மனமுடைந்த அகிலா திடீரென்று சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அகிலாவின் தந்தை நாகராஜ் என்பவர் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் காதல் திருமணம் செய்து 6 ஆண்டு மட்டுமே ஆனதால் அகிலாவின் தற்கொலை குறித்து, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன் விசாரணை நடத்துகிறார்.