சீனாவில் இருந்து வரத்து குறைந்தது கோவையில் செல்போன் உதிரிபாகங்கள் விலை 3 மடங்கு உயர்வு - பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சீனாவில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் செல்போன் உதிரிபாகங்கள் வரத்து குறைந்துள்ளதால், கோவையில் இவற்றின்விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது. பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவில் இருந்து வரத்து குறைந்தது கோவையில் செல்போன் உதிரிபாகங்கள் விலை 3 மடங்கு உயர்வு - பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published on

கோவை,

கோவை மாவட்டம் முழுவதும் செல்போன் விற்பனை கடைகள் 3 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஊரடங்கு தளர்வையொட்டி செல்போன் கடைகள் திறந்து இருந்தாலும் விற்பனை மந்தநிலையில் உள்ளது. அதேநேரம் உதிரிபாகங்களின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது.

செல்போனின் முக்கிய உதிரிபாகமான டிஸ்பிளே முன்பு 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.2,800 முதல் ரூ.3200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் செல்போன் பேட்டரிகள், ஸ்பிரிப் என்ற செல்போன் உள்பகுதியில் பொருத்தக்கூடிய உதிரிபாகத்தின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செல்போனுக்கு 6 சதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளதாலும் புதிய செல்போனின் விலை 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் உதிரிபாகங்களின் வரத்து குறைந்து இருப்பதால் விலை அதிகரித்துள்ளது.

இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி, மொத்தமாக உதிரிபாகங்களை வாங்கி விற்பவர்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாலும் விலை அதிகரித்து இருப்பதாக செல்போன்கடை சிறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை செல்போன் விற்பனையாளர்கள் சங்க தலைவர் எஸ்.மன்சூர் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக செல்போன் விற்பனை குறைந்துள்ளது. பொதுமக்களின் வாங்கும் சக்தி குறைந்து இருப்பதும் ஒரு காரணமாகும். செல்போன் பழுதானால் உதிரிபாகங்களை மாற்றி சமாளிப்பவர்களுக்கும் அதன்விலை உயர்வு 3 மடங்கு உயர்ந்து இருப்பது மேலும் சிரமத்தை அளிக்கும். டிஸ்பிளே, பேட்டரி உள்ளிட்ட அனைத்து உதிரிபாகங்களின் விலையும் அதிகரித்துள்ளது. செல்போனின் ஒட்டு மொத்த உலக சந்தையாக சீனா திகழ்ந்து வருகிறது. சீனாவில் தற்போது நிலைமை சரியாகி இருந்தாலும் அங்கிருந்து ஏற்றுமதி பாதிக்கப்பட்டு இருப்பதால் நமது நாட்டுக்கு வரத்து குறைந்து இருக்கிறது. மேலும் டெல்லி, மராட்டிய மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு உதிரிபாகங்கள் வரவில்லை. இதுவும் ஒரு காரணம்.

உதிரிபாக விலை அதிகரிப்பால் அன்றாட பிழைப்பை நடத்தும் சிறுவியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு தானியங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுபோல், இவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெளிமாநிலங்களுக்கு பார்சல் அனுப்புவது, அங்கிருந்து வருவது ஆகியவற்றை மேலும் தாராளமயமாக்க வேண்டும். இதன் மூலம் விலை உயர்வை சரி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com