புற சிந்தனை திறன் குறைந்த மாணவர்களின் கண்காட்சி

சென்னை அடையாறில் புற சிந்தனை திறன் குறைபாடு கொண்ட மாணவர்கள் கண்காட்சி நடத்தி அசத்தினர். இதனை பார்வையிட்ட அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பார்த்து ரசித்தனர்.
புற சிந்தனை திறன் குறைந்த மாணவர்களின் கண்காட்சி
Published on

சென்னை,

சென்னை அடையாறு காந்திநகர் ராமச்சந்திர ஆதித்தனார் சாலையில் மகிழ்மாறன் பவுண்டேஷன் சார்பில் மகிழ் கற்றல் மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் புற சிந்தனை திறன் குறைந்த (ஆட்டிசம்) மாணவ-மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

நேற்று இந்த சிறப்பு மாணவர்கள் பாதுகாப்பு என்ற தலைப்பில் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர். இந்த கண்காட்சியில் புற சிந்தனை திறன் குறைந்த மாணவர்களின் ஓவியங்கள், கைவினை பொருட்கள், புகைப்பட தொகுப்பு ஆகியவை இடம்பெற்று இருந்தன.

சாலை விதிகளை பின்பற்றுதல், பாதுகாப்பு நடவடிக்கைகள், முதலுதவி சிகிச்சைகள், தமிழக கலாசாரம், கணிதம் சார்ந்த தொகுப்புகள், வெளிநாட்டு நாணயங்கள், தற்காப்பு, சுகாதாரம், வாழ்க்கை திறன், காலைக்கடன்கள் மேற்கொள்வது எப்படி? உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? உள்பட அடிப்படை விஷயங்கள் குறித்தும் வரைபடங்களாக கண்காட்சியில் வைக்கப்பட்டன.

சாதாரண வாழ்வியல் பண்புகளும் தொகுப்புகளாக கண்காட்சியில் இருந்தன. சில மாணவர்கள் 30 வருட காலண்டர் தேதிகளை மனப்பாடமாக கூறி வியக்க வைத்தனர். கண்காட்சியின்போது மாணவர்களுக்கு பயிற்சி மைய ஆசிரியைகள் ஷோபனா கிரிதர், தாரா சுதாகர், வசுந்தரா கோவிந்தராஜன், மெர்லின் வின்சென்ட், சங்கீதா ஆகியோர் உதவி செய்தனர்.

கண்காட்சியில் பார்வையாளர்களாக மாணவர்களின் பெற்றோர்கள்-உறவினர்கள் பங்கேற்றனர். கண்காட்சியில் இடம்பெற்ற ஒவ்வொரு ஓவியத்தையும், வரைபடத்தையும் பார்த்து ரசித்தனர்.

முன்னதாக மாணவர்களே காபி தயாரித்து கண்காட்சி நடக்கும் இடத்துக்கு கொண்டுவந்தனர். கண்காட்சியை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு காபி வழங்கி அன்புடன் வரவேற்றனர்.

மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை முடிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். பிற்பகல் 3 மணி வரை நடந்த கண்காட்சியின் இறுதியில், கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.

ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்த கண்காட்சி குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் பயிற்சி மைய நிறுவனரும், உளவியல் நிபுணருமான ஆர்.வி.கிரிதர் கூறியதாவது:-

எங்கள் மையத்தில் புற சிந்தனைதிறன், மன இறுக்கம், டிஸ்லெக்சியா (கற்றலில் குறைபாடு), டவுன் சிண்ட்ரோம் (மன வளர்ச்சி குறைபாடு) போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். வாழ்க்கை நடைமுறை, அன்றாட தேவைகளை சமாளிப்பது உள்ளிட்டவைகளையே ஆரம்ப கட்ட பயிற்சியாக அளிக்கிறோம். இந்த நிலையில் தாங்கள் கற்றவற்றை செய்முறை விளக்கங்களாக காட்சிப்படுத்தவே இந்த முயற்சிகளை மேற்கொண்டோம்.

இந்த பயிற்சிகள் இந்த குழந்தைகளின் நம்பிக்கையை கட்டமைப்பதோடு, தனிப்பட்ட திறமைகளையும் மேம்படுத்துவதாக அமையும். தொடர்ந்து வருகிற ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் இதுபோல கண்காட்சி நடத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com