மாதா ஆலய திருவிழா ஏராளமானோர் கலந்து கொண்டனர்

காரங்காடு செங்கோல் மாதா ஆலய திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாதா ஆலய திருவிழா ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Published on

தொண்டி,

திருவாடானை தாலுகா தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தில் புனித செங்கோல் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 125-வது ஆண்டு ஜூபிளி நிறைவு விழா மற்றும் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மொத்தம் 10 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தினமும் மாலையில் நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் மாலை நற்கருணை பவனி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தஞ்சை மறைமாவட்டம் பூதலூர் பங்குத்தந்தை செபஸ்தியான் தலைமையில் பங்குத்தந்தை சாமிநாதன் திருவிழா திருப்பலியை நிறைவேற்றினார்.

தொடர்ந்து சப்பர பவனியை பாதிரியார்கள் அர்ச்சித்து தொடங்கி வைத்தனர். இதில் தூய செங்கோல் அன்னை, புனித மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார் ஆகியோர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் கிராமத்தின் முக்கிய வீதிகளில் பவனியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது பக்தர்கள் சிறப்பு ஜெபம் செய்தும், மெழுகுவர்த்திகளுடன் மாதா பாடல்களை பாடியவாறும் ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் நேற்று காலை நடைபெற்ற திருவிழா நிறைவு திருப்பலியை சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு அருட்தந்தை ஜோசப் லூர்து ராஜா தலைமையில் பங்குத்தந்தை சாமிநாதன் மற்றும் பாதிரியார்கள் நிறைவேற்றினர். அதனைதொடர்ந்து சப்பர பவனியும், கொடியிறக்கமும் நடைபெற்றது. இதனையொட்டி வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி செங்கோல் மாதா ஆலயம், மகிமை கோபுரம் ஆகியவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிகளில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம், வியான்னி அருள்பணி மைய இயக்குனர் ஆரோக்கியசாமி, அருட்தந்தையர்கள் மரிய டெல்லஸ், இமானுவேல் மரியான், மரிய அந்தோணி, பிரிட்டோ, சேவியர் இளங்கோ, அகுஸ்தின் உள்ளிட்ட ஏராளமான பாதிரியார்கள், அருட்சகோதரிகள் மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காரங்காடு பங்குத்தந்தை சாமிநாதன், கிராம தலைவர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com