

மீஞ்சூர்,
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த திங்கட்கிழமை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 55 இடங்களிலும், காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 25 இடங்களிலும் 8 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், விநாயகர் சிலை அமைப்பு குழுத் தலைவருமான ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் தலைமையில் விநாயகர் சிலைகள் லாரிகள், டிராக்டர்கள் மூலம் மீஞ்சூர், அரியன்வாயல், நெய்தவாயல், திருவெள்ளைவாயல், காட்டூர் வழியாக பழவேற்காடு கடலில் கரைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது.
மீஞ்சூரில் சுரேஷ்பாபு, அப்பாசாமி ஆகியோர் தலைமையில் எண்ணூர் கடலில் கரைப்பதற்காக விநாயகர் சிலைகளை கொண்டு சென்றனர். பொன்னேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லைநடராஜன், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்பட ஏராமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம், செய்யூர், சித்தாமூர், அச்சரப்பாக்கம், கடப்பாக்கம், மேல்மருவத்துர், சூனாம்பேடு, கருங்குழி , முதுகரை, சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வழிபாடு செய்யப்பட்ட 65 விநாயகர் சிலைகள் மதுராந்தகம் ஏரி, செய்யூரை அடுத்த கடப்பாக்கம் ஆலம்பரகுப்பம், தழுதாலிகுப்பம், பரமன்கேணி குப்பம், கடலூர் குப்பம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.