மதுசூதனன் மறைவு: அ.தி.மு.க. 3 நாள் துக்கம் அனுசரிப்பு: கட்சி நிகழ்ச்சிகள் ரத்து

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று காலமானார். அவரது மறைவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மதுசூதனன் மறைவு: அ.தி.மு.க. 3 நாள் துக்கம் அனுசரிப்பு: கட்சி நிகழ்ச்சிகள் ரத்து
Published on

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம். எம்.ஜி.ஆரின் விசுவாசமிக்க தொண்டர், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதி. அ.தி.மு.க.வின் சோதனையான காலக்கட்டங்களில் கட்சியை கட்டிக்காத்த கட்சியின் தூண் சரிந்ததே என்று கண்ணீர் கடலில் மூழ்கி இருக்கும் நமக்கெல்லாம் யார் ஆறுதல் சொல்ல முடியும்?. உண்மையிலேயே அவரது இழப்பு அ.தி.மு.க.விற்கும், எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும். இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் இறைவன் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், ஒன்றரைக் கோடி தொண்டர்களின் சார்பிலும், எங்கள் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

3 நாள் துக்கம்

அவைத் தலைவர் மதுசூதனன் மறைவையொட்டி 5.8.2021 முதல் 7.8.2021 வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதேபோல், தமிழ்நாடு மற்றும் அ.தி.மு.க. அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும், கட்சி கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதையும்; கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

சசிகலா

சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

மதுசூதனன் மறைவு அ.தி.மு.க.வுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி சோதனையான காலக்கட்டத்தில் துணை நின்றவர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் மிகுந்த பாசம் கொண்டவராக விளங்கினார்.

மதுசூதனனின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அனைத்து தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எல்.முருகன்

மத்திய மந்திரி எல்.முருகன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com