மதுரை-போடி ரெயில் பாதைக்காக கணவாய் மலையை உடைத்து அகலப்படுத்தும் பணி மும்முரம்

மதுரை-போடி வரையிலான அகல ரெயில் பாதை அமைக்கும் பணியின் ஒரு கட்டமாக கணவாய் மலையை உடைத்து அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரை-போடி ரெயில் பாதைக்காக கணவாய் மலையை உடைத்து அகலப்படுத்தும் பணி மும்முரம்
Published on

உசிலம்பட்டி,

மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடி வரையில் ரெயில் பாதை உள்ளது. இந்த பாதையில் கடந்த 2010-ம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன்பின்னர் இந்த பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதனையொட்டி மீட்டர்கேஜ் பாதையில் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை-போடி பாதையில் அகலப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் இழுபறியில் கிடந்தது. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக அகல பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரையில் இருந்து செல்லம்பட்டி வரை அகல ரெயில் பாதையில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது செல்லம்பட்டியில் இருந்து உசிலம்பட்டி வரை அகல பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள கணவாய் மலையில் அகலப்படுத்தும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மீட்டர்கேஜ் பாதை அந்த மலை வழியாக செல்கிறது. இதனால் தற்போது தேனி மாவட்ட எல்லையில் உள்ள கணவாய் மலை பகுதியில் அகல ரெயில் பாதைக்காக மலையை உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மலை பாதையை அகலப்படுத்தும் பணி முடிவடைய குறைந்தது 2 மாதங்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பணிகள் முடிந்த பின்னர் கணவாய் மலையில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மலை பாதையை அகலப்படுத்தும் பணி தொடங்கப்படும் என தெரியவருகிறது. இந்த மலை பாதை தற்போது 7 மீட்டர் வரை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com