மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டு நோயாளிகளை கவனிக்க 3 ரோபோக்கள்

மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளை கவனிக்க 3 ரோபோக்கள் வந்துள்ளன.
மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டு நோயாளிகளை கவனிக்க 3 ரோபோக்கள்
Published on

மதுரை,

மதுரை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு மதுரை மற்றும் விருதுநகரைச் சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, சமூக இடைவெளி அவசியம் என்பதால், நோயாளிகளுக்கு மருந்து, உணவு போன்றவை வழங்குவதில் சிக்கல் இருந்து வந்தது.

இதற்கிடையே அங்கு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்தநிலையில், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மருந்து பொருட்கள் மற்றும் உணவு, உடை போன்றவற்றை வழங்கி கவனிப்பதற்கு வசதியாக புதிய 3 ரோபோக்கள் தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் சார்பில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. இவை அனைத்தும் ரூ.3 லட்சம் மதிப்பிலானது. 3.2 கிலோ எடையுடைய இந்த ரோபோ ஒவ்வொன்றும், ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருத்துவ பணியாளர்கள் அருகில் சென்று பொருட்களை வழங்குவதற்கு பதிலாக இந்த ரோபோக்கள் பொருட்களை எடுத்துச் செல்லும். 15 கிலோ அளவிற்கு உணவு பொருட்களை எடுத்து செல்லும் திறன்கொண்டது. மேலும் அந்த ரோபோவில் உள்ள கேமராக்கள் மூலம் நோயாளிகளிடம் பேசி மருத்துவ துறையினருக்கு தகவல் அனுப்ப முடியும். இதே போல் டாக்டர்களும் செவிலியர்களும் கூட நோயாளிகளுக்கு சொல்ல விரும்புகின்ற விஷயங்களை வாய்மொழியாக சொல்லி அந்த செய்தியினை நோயாளியிடம் கொண்டு சேர்க்க முடியும்.

இதற்கான அறிமுக நிகழ்ச்சி மற்றும் செயல் விளக்கம் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ரோபோவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் மருது பாண்டி, டீன் சங்குமணி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ், பா.ஜ.க. மாநில நிர்வாகி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து ரோபோவை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து செவிலியர்களுக்கும் டாக்டர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com