முதுகலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்: மத்திய சுகாதாரத்துறை இயக்குனருக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

முதுகலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய சுகாதாரத்துறை இயக்குனர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முதுகலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்: மத்திய சுகாதாரத்துறை இயக்குனருக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

மதுரை,

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியைச் சேர்ந்த டாக்டர் அபிமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை எழுதினேன். அதில் 690 மதிப்பெண்கள் பெற்றதால், அகில இந்திய ஒதுக்கீட்டில், பெண்களுக்கான மகப்பேறுயியல் துறையில் படிக்க இடம் கிடைத்தது. பின்னர் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் நடக்கும். இதில் 50 சதவீத இடங்கள் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும். மாநில அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தால், அகில இந்திய ஒதுக்கீட்டில் கிடைத்த சீட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும். தற்போது மாநில ஒதுக்கீட்டில் பங்கேற்போர், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் பெற்ற இடங்களை ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக மாநில அரசுக்கான தனியார் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் இன்னும் நடக்கவில்லை. இதனால் என்னைப் போன்ற பலர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முதுகலை மருத்துவ படிப்புக்கான தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவிற்கான கவுன்சிலிங்கை வருகிற 8-ந்தேதிக்குள் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று நீதிபதி பி.டி.ஆதிகேசவலு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தார்.

அப்போது, மருத்துவ கல்வி இயக்குனரக தேர்வுக்குழு சார்பில் ஆஜரான வக்கீல், தனியார் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங்கை முடிக்கவும், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான சீட்டை ஒப்படைப்பதற்கான அவகாசத்தை வருகிற 13-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என வாதாடினார்.

இதையடுத்து நீதிபதி, தனியார் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங்கை முடிப்பதற்கான அவகாசம் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களை ஒப்படைப்பது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய சுகாதாரத்துறை இயக்குனர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் முடிவை இன்று (6-ந்தேதி) மாலை 4 மணிக்குள் தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். கோர்ட்டின் இந்த உத்தரவு நிறைவேற்றப்படாவிட்டால், இந்த மனுவை 7-ந்தேதி (நாளை) மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com