மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் பக்தர்கள் பயன்பாட்டிற்கு நாளை திறப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் பக்தர்கள் பயன்பாட்டிற்கு நாளை திறக்கப்பட உள்ளது என்று சித்திரை திருவிழா ஆய்வின் போது அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் பக்தர்கள் பயன்பாட்டிற்கு நாளை திறப்பு
Published on

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் வீரராகவராவ், மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள், மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகள் திருக்கல்யாணம் நடைபெறும் பகுதியை ஆய்வு செய்தனர்.

சித்திரை திருவிழாவை காணவரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் செய்துள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு மற்றும் தெற்கு சித்திரை வீதி, வடக்காடி வீதி மற்றும் மேற்கு ஆடி வீதிகளில் தற்காலிக தகர பந்தல் ஒரு லட்சம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணம் நடைபெறும் பகுதியில் குளு, குளுவசதி செய்யப்பட்டுள்ளது. 20 இடங்களில் எல்.இ.டி. டி.வி. மூலம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. திருக்கல்யாணத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு 40 ஆயிரம் பிரசாத பை, தண்ணீர் பாட்டிலுடன் வழங்கப்பட உள்ளது. இது தவிர பக்தர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கல்யாண தினத்தன்று மருத்துவக்குழுக்கள் கோவிலுக்குள் 2 இடங்களிலும், கோவிலுக்கு வெளியிலும் தயார் நிலையில் இருக்கும். சாமி புறப்பாட்டின் போது ஒரு ஆம்புலன்ஸ், 2 பைக் ஆம்புலன்ஸ்கள் உடன் செல்லும். திருக்கல்யாண மேடையின் பின்புறம் ஒரு வண்டியும், மேற்கு சித்திரை வீதியில் 2 தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் இருக்கும். திருவிழா பற்றிய தகவல் அறிந்திட ஏதுவாகவும், பக்தர்களின் அவசர உதவிக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் ஹெல்ப் லைன் எண்-12890 வசதி செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்தில் சேதம் அடைந்த பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சீரமைக்கப்பட்டு விட்டது. எனவே பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதல்வரின் உத்தரவின்படி நாளை(சனிக்கிழமை) முதல் ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்பட உள்ளது. இதற்காக வடக்கு ஆடி வீதியில் தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே முதல்-அமைச்சர் ஆணை பெற்று வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். கள்ளழகர் எழுந்தருளும் 435 மண்டகப்படிகளில் பாதுகாப்பான முறையில் பந்தல் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வைகை ஆற்றை சுற்றிலும் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

மீனாட்சி அம்மன் கோவிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஆடி வீதிகளில் நிரந்தரமாக ஆம்புலன்சு நிறுத்தப்படும். கோவில் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 7-வது ஊதியக்குழுவின் படி சம்பள உயர்வு முதல்வரின் ஆணை பெற்று விரைவில் வழங்கப்படும். கோவில் நிதியில் இருந்து அவர்களுக்கு இந்த சம்பள உயர்வு வழங்க உள்ளோம்.

ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன், மாணிக்கம், பெரியபுள்ளான், பேரவை நிர்வாகிகள் தமிழரசன், வெற்றிவேல், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அண்ணாநகர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com