மதுரை அருகே கொலை வழக்கில் துப்புதுலங்கியது: சொத்துக்காக வாலிபரை கழுத்தை அறுத்து கொன்ற 76 வயது பாட்டி, பரபரப்பு தகவல்

மதுரை அருகே வாலிபர் கொலை வழக்கில் துப்புதுலங்கியது. சொத்துக்காக அவருடைய 76 வயது பாட்டியே இந்த பயங்கர சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.
மதுரை அருகே கொலை வழக்கில் துப்புதுலங்கியது: சொத்துக்காக வாலிபரை கழுத்தை அறுத்து கொன்ற 76 வயது பாட்டி, பரபரப்பு தகவல்
Published on

மேலூர்,

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வி.எஸ்.நகரத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் விஜயராகவன். இவரது மகன் ராஜா (வயது 37). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஆகாஷ், பிரியதர்ஷினி ஆகிய பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக ராஜாவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

மது அருந்தும் பழக்கம் உடைய ராஜா கடந்த 14-ந்தேதி குடிபோதையில் தனது வீட்டில் தூங்கினார். மறுநாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த கொலை குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலைச் சம்பவத்துக்கு முதல் நாள் ராஜாவுடன் சேர்ந்து மது அருந்தியவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதே போல் கணவரை பிரிந்து சிவகங்கையில் வசித்த சங்கீதாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் எந்த வித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறினர்.

கொலை செய்யப்பட்ட ராஜாவின் உடல் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் கொலையாளி ராஜாவின் கழுத்தை நீண்ட நேரம் ஆயுதத்தால் அறுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது கொலையுண்ட ராஜாவின் 76 வயதான பாட்டி புத்திசிகாமணி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் தனது பேரனை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

ராஜா, தனது பாட்டியிடம் சொத்தை எழுதிக் கொடுக்குமாறு கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். மற்ற பேரன், பேத்திகளுக்கு சொத்து கிடைக்காமல் ராஜாவே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, மது குடித்து அழித்து விடுவார் என்று எண்ணிய புத்திசிகாமணி அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று குடிபோதையில் ராஜா முழுமையாக மயங்கி உள்ளார். அப்போது அவரது செல்போனில் அழைப்புவந்து விடும் என்று கருதி செல்போனை எடுத்து வெளியே வைத்துள்ளார். பின்னர் அரிவாள் மனையால் ராஜாவின் கழுத்தை நீண்ட நேரம் அறுத்து கொலை செய்ததாக தெரியவருகிறது.

இதையடுத்து மூதாட்டி புத்திசிகாமணியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் துப்பு துலக்கிய சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை, போலீஸ்காரர்கள் மாணிக்கம், முத்துக்குமார் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com