திருமூர்த்திமலை அமணலிங்கேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா: திரளான பக்தர்கள் சாமிதரிசனம்

திருமூர்த்திமலை அமணலிங்கேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமூர்த்திமலை அமணலிங்கேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா: திரளான பக்தர்கள் சாமிதரிசனம்
Published on

தளி,

உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இங்கு பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோர் ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகளுக்கு அமாவாசை, மகாசிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. மும்மூர்த்திகள் குன்றில் சுயம்பு வடிவமாக இருப்பதால் அங்கு கோபுரம் அமைக்கப்படவில்லை.

இதனால் மூங்கில் குச்சிகளை கொண்டு கோபுரவடிவில் செய்யப்பட்ட சப்பரத்தை வைத்து காலங்காலமாக வழிபாடு நடத்தப்படுகிறது. சப்பரமானது ஆண்டுதோறும் மாசி அமாவாசையன்று கட்டளைதாரர்கள் மூலமாக பூலாங்கிணருக்கு எடுத்துச்செல்லப்படும். பின்னர் ஒரு மாத காலம் சப்பரம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும்.

அதைத்தெடர்ந்து மகாசிவராத்திரியன்று காலை பூலாங்கிணரில் இருந்து மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள சப்பரத்தை திருமூர்த்திமலைக்கு ஊர்வலமாக கொண்டு வருவார்கள்.

அந்த வகையில் நேற்று மகாசிவராத்திரியையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் மேளதாளங்கள் முழங்க பூலாங்கிணரில் இருந்து வாளவாடி, தளி ஆகிய ஊர்கள் வழியாக திருமூர்த்திமலைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது அதன் மீது பக்தர்கள் நேர்த்திக்கடனாக வாழைப்பழம், உப்பு மற்றும் மிளகு வீசி வழிபட்டனர். அவர்களுடன் விவசாயிகளும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், கொண்டைக்கடலை, மக்காச்சோளம் மற்றும் சிறு தானியங்களை சப்பரத்துக்கு படைத்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சப்பரத்தை நேற்று மாலையில் மும்மூர்த்திகள் அருள்பாலித்து வருகின்ற குன்றின்மீது மலைவாழ்மக்கள் வைத்தனர்.

அதன் பின்னர் மும்மூர்த்திகளுக்கு 4 கால பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் மோட்டார்சைக்கிள், கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களிலும் பாதயாத்திரையாகவும் திருமூர்த்திமலைக்கு வந்திருந்தனர். பின்னர் இரவு முழுவதும் கண்விழித்து மும்மூர்த்திகளுக்கு நடைபெற்ற நான்கு கால பூஜைகளில் கலந்து கொண்டனர்.

மேலும் திரளான பக்தர்கள் கண்விழித்து பூஜைகளில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக உபயதாரர்கள் மூலம் பரத நாட்டியம், தேவராட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அத்துடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு வசதியாக போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் நேற்று காலை முதல் இயக்கப்பட்டன.

மேலும் திருமூர்த்திமலைக்கு வந்திருந்த பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, ராஜ்கண்ணன், ஓம்பிரகாஷ், சுப்புராமன் உள்ளிட்ட போலீசார் மற்றும் ஊர்காவல்படையினர் நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com