மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்த மக்கள்

மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தின் வெளிப்பகுதி மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று காலை பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர்.
மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்த மக்கள்
Published on

சென்னை,

அமாவாசை திதி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், குல தெய்வ வழிபாட்டிற்கும் ஏற்ற நாளாகும். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்கள் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாகும். எந்த அமாவாசையில் திதி கொடுக்க மறந்தாலும் மகாளய பட்ச காலத்திலும், மகாளய அமாவாசையிலும் திதி கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியை முழுமையாக பெறலாம் என்பது நம்பிக்கையாகும்.

தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக கடற்கரை, முக்கிய நதிக்கரைகள் மற்றும் நீர்நிலைகளில் கூடுவதற்கும், திதி கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இருந்தாலும் சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தின் வெளிப்பகுதி மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று காலை 6 மணி முதலே முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். பொதுமக்கள் முககவசம் அணிந்து வந்ததுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

திதி கொடுக்க வந்தவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

அதேபோல் பட்டினப்பாக்கம் கடற்கரையில் மணல் தரையில் அமர வைத்து முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியவில்லை என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் அரசாங்கத்தின் நோய் பரவலை தடுக்கும் வழிமுறையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளிலேயே திதி தர்ப்பணம் செய்தனர் என்று மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் திதி கொடுக்க வந்தவர்கள் தெரிவித்தனர்.

மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்கள் கோவில்களுக்கு சென்றும் வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com