நாளை மகாளய அமாவாசை: அம்மா மண்டபம் உள்ளிட்ட படித்துறைகளுக்கு பொதுமக்கள் வரவேண்டாம்

நாளை மகாளய அமாவாசையையொட்டி அம்மா மண்டபம் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை மகாளய அமாவாசை: அம்மா மண்டபம் உள்ளிட்ட படித்துறைகளுக்கு பொதுமக்கள் வரவேண்டாம்
Published on

திருச்சி,

மகாளய அமாவாசை தினத்தன்று கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோருக்கு திதி கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகமாகும். நாளை (வியாழக்கிழமை) மகாளய அமாவாசை ஆகும். திருச்சி காவிரி ஆறு அம்மா மண்டபம் படித்துறையில் பொதுமக்கள் முன்னோருக்கு திதி கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரடங்கு உத்தரவு

திருச்சி மாநகரில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 30.09.2020 நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

எனவே நாளை (வியாழக்கிழமை) மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, வடக்கு வாசல் (கொள்ளிடம் ஆறு), அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை மற்றும் ஓடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் மகாளய அமாவாசையை முன்னிட்டு மேற்படி நீர்நிலைகளுக்கு வர வேண்டாம். மேலும் பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை கடைப்பிடித்து திருச்சி மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தடை உத்தரவை மீறி நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com