குத்தகைக்கு எடுப்பவர் அதிக வருவாய் பெறுகிறார்: பொது கழிப்பறை பராமரிப்பை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்கலாமே? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

குத்தகைக்கு எடுப்பவர் அதிக வருவாய் பெறுவதால் பொது கழிப்பறைகளை பராமரிக்கும் பொறுப்பை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாமே? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
குத்தகைக்கு எடுப்பவர் அதிக வருவாய் பெறுகிறார்: பொது கழிப்பறை பராமரிப்பை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்கலாமே? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
Published on

மதுரை,

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்கும் பணியை பவன்குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். கட்டண கழிப்பறைகள் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதை தடுக்கவில்லை என்றும் மாநகராட்சிக்கு புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு நேரில் ஆய்வு செய்தனர். இதில் புகாரில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டன. இதையடுத்து பஸ்நிலையத்தில் இருந்த 5 கழிப்பறைகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று பவன்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சார்பில் வக்கீல் ஆயிரம் செல்வகுமார் ஆஜராகி, மனுதாரர் மீது கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அவர் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கப்பட்டார். ஆனாலும் அவர் தன் தவறுகளை திருத்திக்கொள்ளவில்லை. எனவே தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

பஸ் நிலையம், அரசு அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களை பராமரிக்கும் கடமை மாநகராட்சிக்கு உள்ளது. கழிப்பறையை பொறுத்தமட்டில் சுத்தமாக வைத்திருப்பது மிக முக்கியம். இதை வணிக நோக்கில் ஏலம் விடுவதால், ஏலம் எடுப்பவர் அதிக வருவாய் பெறுவார். டெல்லி போன்ற பெருநகரங்களில் பல்வேறு இடங்களில் உள்ள கழிப்பறைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பில் சுகாதாரமான முறையில் பராமரித்து, அதை இலவசமாக மக்கள் பயன்படுத்தச் செய்கிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக சேவைக்காக தங்களின் வருவாயில் குறிப்பிட்ட சதவீத தொகையை ஒதுக்க வேண்டும். இந்த தொகையில் இருந்து கழிப்பறைகள், குளியலறைகளை சுகாதாரமாக பராமரிக்கலாம். இந்த நடவடிக்கைகள் மூலம் செலவுகளை தவிர்ப்பது மட்டுமல்லாமல் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவதையும் தடுக்க முடியும்.

எனவே இவற்றை ஏலம் விட்டு, அதை முறையாக பராமரிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, சமூக அக்கறையுடன் முன்வரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பொது கழிப்பறைகள், குளியலறைகளை நல்ல முறையில் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கலாமே?

இதுதொடர்பான திட்டத்தை நெல்லை மாநகராட்சி கமிஷனர் தயாரித்து அதை நகராட்சி நிர்வாக கமிஷனருக்கு அனுப்ப வேண்டும். அதை நவம்பர் 21-ந்தேதிக்குள் பரிசீலித்து எடுக்கப்பட்ட முடிவை இந்த கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதித்தது தொடர்பாக, விளக்கம் அளிக்க அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவரது விளக்கத்தின்பேரில் மாநகராட்சி கமிஷனர் உரிய முடிவை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com