மானம், மரியாதை இருந்தால் பெரும்பான்மையை குமாரசாமி நிரூபித்து காட்டட்டும் பா.ஜனதா மூத்த தலைவர் அசோக் சவால்

மானம், மரியாதை இருந்தால் பெரும்பான்மையை முதல்-மந்திரி குமாரசாமி நிரூபித்து காட்ட வேண்டும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் அசோக் சவால் விடுத்துள்ளார்.
மானம், மரியாதை இருந்தால் பெரும்பான்மையை குமாரசாமி நிரூபித்து காட்டட்டும் பா.ஜனதா மூத்த தலைவர் அசோக் சவால்
Published on

பெங்களூரு,

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்து விட்டது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று முதல்-மந்திரி குமாரசாமி தான் அறிவித்திருந்தார். அப்படி இருந்தும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல், சட்டசபையில் தேவையில்லாத விவாதங்களை நடத்தி காலதாமதம் செய்வது ஏன்?. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் தனது சொந்த விஷயங்கள் பற்றியும், பா.ஜனதா மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறியும் சட்டசபையில் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர்களும் பேசி வருகின்றனர்.

குமாரசாமிக்கு கவர்னர் வஜூபாய் வாலா தான் முதல்-மந்திரியாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று குமாரசாமிக்கு கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்-மந்திரி குமாரசாமிக்கு மானம், மரியாதை இருந்தால் சட்ட சபையில் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திவிட்டு பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும்.

தனக்கு பா.ஜனதாவினர் ரூ.5 கோடி கொடுத்ததாக சீனிவாஸ் கவுடா எம்.எல்.ஏ. சட்டசபையில் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுதொடர்பாக ஊழல் தடுப்பு படையில் வழக்குப்பதிவாகி உள்ளது. ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சீனிவாஸ் கவுடா எம்.எல்.ஏ.வுக்கு பல முறை நோட்டீசு அனுப்பி இருந்தனர்.

அவரது குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் விசாரணைக்கு ஆஜராகி நடந்ததை சொல்லி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போலீசாரின் நோட்டீசுக்கு பதில் அளிக்காமலும், விசாரணைக்கு ஆஜராகாமலும் சீனிவாஸ் கவுடா ஓடி, ஒளிந்தது எதற்காக?. அதுபற்றி அவர் தான் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அசோக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com